/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்சில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
பஸ்சில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பஸ்சில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பஸ்சில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : மார் 06, 2025 10:26 PM

கோவை; கோவை மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கோவை மாநகரில் நடக்கும் குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில், மாநகரை 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் 'பீட் சிஸ்டம்' முறையை அறிமுகப்படுத்தினார்.
அதன் படி, பீட் ஆபிசர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மாநகர பகுதிகளில் அடிதடி, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜன., பிப்., மாதங்களில் 153 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தாண்டு பீட் ஆபிசர்ஸ் முறை கொண்டு வந்த பிறகு அதன் எண்ணிக்கை 114 ஆக குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் மாநகர பகுதிகள் பாதுகாப்பாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் பஸ்களில் நடக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த இரு வாரங்களில் மட்டும் ஏழு செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஐந்து சம்பவங்கள் பஸ்சில் சென்ற போது அரங்கேறியுள்ளது. இது தவிர, கடந்த 3ம் தேதி சுந்தராபுரம் பகுதியில் ஒரு வழிப்பறி சம்பவம், துடியலுார் பகுதியில் பூட்டை உடைத்து 15 நகை திருட்டு, சிங்காநல்லுார் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் பீளமேடு பகுதியில் நடந்து சென்ற பெண் கழுத்தில் இருந்த செயினை பைக்கில் வந்த இரு பெண்கள் பறித்துச் சென்றனர். அவர்களை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர். இது தவிர, பஸ்சில் பயணிக்கும் பெண்கள், குறிப்பாக மூதாட்டிகளை குறி வைத்து செயின் பறிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.
இதனால் பஸ்சில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு போலீசார் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.