/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி கொடுங்க! உற்பத்தி செலவை விட குறைத்து விலை நிர்ணயம்
/
கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி கொடுங்க! உற்பத்தி செலவை விட குறைத்து விலை நிர்ணயம்
கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி கொடுங்க! உற்பத்தி செலவை விட குறைத்து விலை நிர்ணயம்
கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி கொடுங்க! உற்பத்தி செலவை விட குறைத்து விலை நிர்ணயம்
ADDED : டிச 28, 2024 12:36 AM
பொள்ளாச்சி; மத்திய அரசின் விலை நிர்ணயக்குழு நேரடியாக கள ஆய்வு செய்தும், கொப்பரைக்கான ஆதார விலை கிலோவுக்கு, நான்கு ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால், இந்தாண்டும் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மற்ற சாகுபடிகளை விட தென்னை சாகுபடி அதிகளவு உள்ளது. இப்பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தேங்காய், கொப்பரை போன்றவை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். விலை இல்லாதது; வறட்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் தென்னை விவசாயிகள் மீளாத்துயரில் உள்ளனர்.
கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு பின், கொப்பரை விலை கிலோவுக்கு, 100 ரூபாயை கடந்துள்ளது. எனினும், கொப்பரை உற்பத்தி இல்லாததால், விவசாயிகள் பயன் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், மத்திய அரசின் விலை நிர்ணயக்குழு, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள கொப்பரை களங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.
அப்போது, ஒரு கிலோ கொப்பரை உற்பத்தி செய்வதற்கு ஏற்படும் செலவினம் குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தது. விவசாயிகளின் கோரிக்கைகள், மத்திய அரசுக்கு தெரிவித்து அதிகபட்ச ஆதார விலை பெற்றுத்தருவதாக குழுவினர் உறுதியளித்துச் சென்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு, நடப்பாண்டுக்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவிண்டாலுக்கு 420 ரூபாய் உயர்த்தி, 11,582 ரூபாயாகவும், முழு (பந்து) கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு, 100 ரூபாய் உயர்த்தி, 12,100 ரூபாயாகவும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
கொப்பரை கிலோவுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையாக, 150 ரூபாய் வரை உயர்த்தப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், 115.82 ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ளது விவசாயிகளிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
விநாயகா தென்னை நார் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன் கூறியதாவது:
கடந்தாண்டு விலை நிர்ணயக்குழு ஆய்வு செய்த போது, ஒரு கிலோ கொப்பரை உற்பத்தி செய்ய, 139 ரூபாய் செலவாகிறது என்றும், 150 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கடந்தாண்டு அரசு, 111.60 ரூபாய்க்கு கொப்பரையை கொள்முதல் செய்தது. நடப்பாண்டு விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி விலை உயர்த்தாமல், 4 ரூபாய், 22 பைசா உயர்த்தி, 115.82 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இது பற்றாக்குறையாகத்தான் இருக்கும்.
தமிழக அரசு, தென்னை விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, கொப்பரை ஆதார விலை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று, கொப்பரைக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.