/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பனிப்பொழிவு அதிகரிப்பு: கருகும் தேயிலை செடிகள்
/
பனிப்பொழிவு அதிகரிப்பு: கருகும் தேயிலை செடிகள்
ADDED : டிச 12, 2024 10:00 PM

வால்பாறை; வால்பாறையில், சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், தேயிலை செடிகள் கருகியுள்ளன.
வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில், மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, குன்னுார், கொச்சி போன்ற ஏல மையத்துக்கும், வெளிநாடுகளுக்கும் டீ துாள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்ததால், பி.ஏ.பி., அணைகள் நிரம்பின. தேயிலை செடிகளுக்கும் தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, வால்பாறையில் வடகிழக்குப் பருவமழை சாரல்மழையாக பெய்து வருகிறது. இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலை செடிகள் மீண்டும் துளர்விடத்துவங்கியுள்ளன. ஆனால், கடந்த சில நாட்களாக சீதோஷ்ணநிலை மாற்றத்தால், எஸ்டேட் பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், தேயிலை செடிகள் கருகியுள்ளன.
தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பருவமழைக்கு பின் தேயிலை செடிகள் துளிர்விடத்துவங்கியுள்ளன. ஆனால், காலை, மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், சில எஸ்டேட்களில் தேயிலை செடிகள் கருகியுள்ளன.
தேயிலை செடிகள் பனிப்பொழிவால் கருகாமல் இருக்க உரிய பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.

