/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக ஜவுளி சந்தையை இந்தியா வழிநடத்தும்: சைமா நம்பிக்கை
/
உலக ஜவுளி சந்தையை இந்தியா வழிநடத்தும்: சைமா நம்பிக்கை
உலக ஜவுளி சந்தையை இந்தியா வழிநடத்தும்: சைமா நம்பிக்கை
உலக ஜவுளி சந்தையை இந்தியா வழிநடத்தும்: சைமா நம்பிக்கை
ADDED : செப் 30, 2025 10:47 PM

ஜ வுளித் தொழில்துறையின் தற்போதைய நிலை, சவால்கள், அரசின் ஆதரவு, சந்தையின் போக்கு, தொழில்முனைவோரின் மனப்பாங்கு ஆகியவை குறித்து, சைமா தலைவர் துரை பழனிசாமி நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
பெருமளவில் பருத்தியை அடிப்படையாகக் கொண்ட இந்திய ஜவுளித் தொழில், அதிக மூலதனச் செலவு, உயர்ந்து வரும் மின் கட்டணம் போன்ற சவால்கள் இருந்த போதிலும், ஜவுளித் தொழில் உலக சந்தையில் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாட்டின் ஒட்டு மொத்த ஜவுளி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை தமிழகம் வைத்திருக்கிறது; ஏற்றுமதியில் 28 சதவீத பங்கை கொண்டுள்ளது.
மத்திய அரசின் ஆதரவு மத்திய அரசு 2000-ல் அறிவித்த முதல் ஜவுளிக் கொள்கை, தேசிய அளவில் ஜவுளித் தொழிலை மேம்படுத்த உறுதியான அடித்தளத்தை அமைத்தது. முக்கிய ஜவுளி உற்பத்தி மாநிலங்களான குஜராத், மஹா., ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ம.பி., தங்களுக்கென தனிப்பட்ட ஜவுளிக் கொள்கைகளை பல்வேறு ஊக்கத் திட்டங்களுடன் அறிவித்து, வெகுவாக முன்னேறி உள்ளன. இதனால், ஜவுளித் துறையின் புவியியல் விரிவும், முதலீட்டு வளர்ச்சியும் பல மடங்கு உயர்ந்தது. இந்த முயற்சிகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஏற்றுமதி அதிகரிப்புக்கும் வலுவான ஊக்கமாக அமைந்தன.
மேலும், எம்.எஸ்.எம்.இ., தொழில்கள் வலுவடைய, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தை அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் நவீன உள்கட்டமைப்புடன் கூடிய ஜவுளி பூங்காக்கள் உருவாகி, சிறு நிறுவனங்கள் உலக தரச் சந்தைகளில் நுழைய முடிந்தது.
இலக்குகள் வரும் 2047-ல் 'வளர்ச்சியடைந்த பாரதம்' - என்ற இலக்கை நிர்ணயித்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு புரட்சிகரமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
இதில், கடந்த ஜூலை 24ல் கையொப்பமான இந்தியா- - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல். ஜவுளித் தொழிலின் வளர்ச்சி, இந்த இலக்கை அடைய மிக முக்கியமானதாகும்.
எனவே, மத்திய அரசு தற்போதைய ஜவுளி சந்தை மதிப்பை 172 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து, 2030ம் ஆண்டில் 350 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், 100 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியும் அடங்கும்.
வேகமாக மாற்றமடையும் நாகரிகம், இ காமர்ஸ், மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் இந்தியாவின் நம்பகத்தனமான வர்த்தகம் போன்றவை மேற்கண்ட இலக்கை அடைய சாதகமாக உள்ளன.
இந்திய ஜவுளித் தொழில் பெரும்பாலும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களைக் கொண்டுள்ளது. அரசின் சிறப்புமிக்க கொள்கைகளாலும், சிறந்த தரம் மற்றும் உற்பத்தித் திறனாலும் உலகளாவிய போட்டித் திறனை கொண்டுள்ளது.
சவால்களும் முன்னெடுப்புகளும் பல்வேறு நாடுகள் இந்திய ஜவுளிப் பொருட்கள் மீது விதித்து வரும் 36 சதவீதம் வரையிலான வரிகளினால் ஏற்றுமதியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு வரியில்லா மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பல்வேறு நாடுகளுடன் போர்க்கால அடிப்படையில் பேச்சு நடத்தி கையொப்பமிட்டு வருகிறது.
ஆஸி., ஐக்கிய அரபு அமீரகம், சுவிஸ், மொரீஷியஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்தானதால், இந்நாடுகளுடனான வர்த்தகம் வெகுவாக முன்னேறியது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பந்தமிடுவது மிக முக்கியமென கருதி, இதற்கான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.
திட்டங்களும் வாய்ப்புகளும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள ரூ.1,480 கோடி தேசிய ஜவுளி தொழில்நுட்ப திட்டம், ரூ.10,680 கோடி உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் மற்றும் ரூ.4,445 கோடி பி.எம்., மித்ரா பூங்கா போன்றவைகளின் மூலம் மிகப் பெரிய முதலீடுகளை ஈர்ப்பதுடன், இலட்சக்கணக்கான, வேலைவாய்ப்புகளை விரைவாக ஏற்படுத்த இந்தியா-பிரிட்டன் இடையேயான ஒப்பந்தம் பெரிதும் உதவும்.
பருத்தி உற்பத்தித் திறன் தரம் மற்றும் விவசாயிகளின் வருவாயை உயர்த்த, ரூ. 5,900 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
ஜவுளிதொழிலின் முழு மதிப்புச் சங்கிலியையும் 5 சதவீத ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வந்து, துணிச்சலான மற்றும் தகுந்தநேரத்தில் எடுக்கப்பட்ட வரிசீர்திருத்தம், இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள அசாதாரண சுங்க வரி சுமையை சமாளிக்க ஊக்கமாக இருக்கும்.இந்த வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தம், உள்நாட்டு ஜவுளி தேவையை கணிசமாக உயர்த்தும். இதனால் தனிநபர் நுகர்வு 5-7 சதவீதம் வரை உயரும்.
இந்திய ஜவுளித் தொழில்துறை, கடந்த சில தசாப்தங்களில் உலகளாவிய போட்டியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. நிலைத்தன்மை, புதுமை, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் உலக சந்தையை முன்னோக்கி நடத்தக்கூடிய வல்லமை இந்தியாவுக்கு உள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.