இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மாற்றங்களால் பலன் வராது என தொழில் துறை கவலை
இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மாற்றங்களால் பலன் வராது என தொழில் துறை கவலை
ADDED : மார் 27, 2026 04:45 PM
கோவை: பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில், மத்திய அரசு சில மாற்றங்களை செய்துள்ளது. செமிகண்டக்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, ஜி.சி.சி., உள்ளிட்ட புதிய துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. சி.எஸ்.ஆர். நிதி திட்டம் இல்லாத நிறுவனங்களும் திட்டத்தில் இணையலாம் என்பது உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும், எம்.எஸ்.எம்.இ. துறைக்கு சாதகமான திருத்தங்கள் இல்லை என, இந்திய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் ரகுநாதன் கூறியதாவது:
இவை மேலோட்டமான மாற்றங்கள்தான். 90 சதவீத வேலைவாய்ப்பை உருவாக்கும் எம்.எஸ்.எம்.இ. துறை புறக்கணிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை ரூ.9,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், உற்பத்தித் துறையில் இது இளைஞர்களை ஈர்க்காது. தொழில் நிறுவனங்கள், எவ்வித ஊக்கமும் இன்றி பயிற்சி அளிக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
இன்டர்ன்ஷிப் அளிக்கும்போது நேர விரயம், உற்பத்தி இழப்பு, நேரடி நிதிச்சுமை ஆகியவை நேரிடும். இதற்கு நிதியுதவி வேண்டும். பயிற்சி காலம் 6 முதல் 9 மாதங்கள் என குறைக்கப்பட்டிருக்கிறது. இது, அடிப்படைக் கற்றலுக்கே போதாது. பயிற்சி பெறுபவர் உற்பத்தி நிலைக்கு வரும்போது, பயிற்சி காலம் முடிந்து விடும். இது, குறுகிய கால அனுபவமாக மாறி விடும். வேலை வாய்ப்பை உருவாக்காது.
எனவே, திட்டத்தில் முழுமையான மறு வடிவமைப்பு செய்யப்பட வேண்டும். எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான எளிய, குறைந்த ஆவண நடைமுறை, நேரடி நிதியுதவி, கிளஸ்டர் அடிப்படையிலான செயல்பாடு, இன்டர்ன்ஷிப் முடிந்ததும், அப்பிரன்டிஷிப் பின் வேலைவாய்ப்பு என சங்கிலித் தொடர் திட்டமிடல் போன்றவை தேவை.
