திடக்கழிவு மேலாண்மைக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்
திடக்கழிவு மேலாண்மைக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 06, 2026 05:57 AM
பொள்ளாச்சி: ஆனைமலை பேரூராட்சித்தலைவர் கலைச்செல்வி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
ஆனைமலை பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டதுக்கு வளமீட்பு பூங்கா, ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
வளர்ந்து வரும் மக்கள் தொகை, ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வெளியூர் பயணியரின் வருகை காரணமா, தினமும் ஆறு டன்னுக்கும் அதிகமாக கழிவுகளை கையாள வேண்டிய சூழல் உள்ளது. குப்பையை தரம் பிரித்து தருவதில் மக்களிடம் போதிய விழிப்புணர்வின்மை, இடப்பற்றாக்குறை காரணமாக, குப்பை தரம் பிரிக்கும் பணிகள் சிரமமாக உள்ளது.
எனவே, பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, ஆனைமலை பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாட்டுக்கு கூடுதலாக இடம் தேவைப்படுகிறது.
பேரூராட்சி எல்லை அல்லது பேரூராட்சி அருகே உள்ள கிராம ஊராட்சி எல்லைக்குள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ஏதுவாக, அரசு புறம்போக்கு நிலம் இருப்பின் அதன் விபரத்தை தெரிவிக்க, பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடம் ஒதுக்கீடு செய்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.
