/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளைஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.,க்கு ரூ.1 லட்சம் அபராதம்
/
இளைஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.,க்கு ரூ.1 லட்சம் அபராதம்
இளைஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.,க்கு ரூ.1 லட்சம் அபராதம்
இளைஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.,க்கு ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : மே 08, 2025 12:27 AM
சென்னை:ஜாதி பெயர் சொல்லி, பட்டியலின இளைஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர், சப் -இன்ஸ்பெக்டருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலுார் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பரணிதரன், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
கடந்த, 2016 டிசம்பர் 22 இரவு, 7.30 மணியளவில், என் தந்தைக்கு உணவு வாங்குவதற்காக, ஒரு ஹோட்டல் முன் நின்று கொண்டிருந்தேன்.
அங்கு வந்த அன்றைய பள்ளிகொண்டா சப் -- இன்ஸ்பெக்டர் கவிதா, என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, போலீசுக்கு நான் மரியாதை கொடுப்பதில்லை எனக்கூறி, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த என்னை, ஜாதி அடிப்படையில் திட்டினார்.
என் பேன்ட், சட்டையை கழற்றி, ஜட்டியுடன் நிற்க வைத்தார்.
அப்போது அங்கிருந்த பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் முருகன், என்னை லத்தியால் தாக்கி, சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டினார்.
அதன்பின், என் மீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். என்னை தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர், சப் - -இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த, ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் பரணிதரன் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சப்- - இன்ஸ்பெக்டர் கவிதா, சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொண்டதாகவும், மனித உரிமை மீறலில் ஈடுபடவில்லை என்றும், பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் முருகன், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து, பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, முருகன் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதாகவே கருத வேண்டிஉள்ளது.
ஆணைய விசாரணையில், மனுதாரருக்கு மனித உரிமை மீறல் நடந்திருப்பது தெரிகிறது.
எனவே, மனுதாரர் பரணிதரனுக்கு, தமிழக அரசு இழப்பீடாக, 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இதை, இன்ஸ்பெக்டர் முருகன், சப்- இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோரிடம் இருந்து, தலா 50 ஆயிரம் ரூபாய் வசூலித்து கொள்ளலாம். இருவர் மீதும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.