/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியில் உத்வேகம்! பட்ஜெட், ரெப்போ விகித அறிவிப்புகளால்
/
ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியில் உத்வேகம்! பட்ஜெட், ரெப்போ விகித அறிவிப்புகளால்
ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியில் உத்வேகம்! பட்ஜெட், ரெப்போ விகித அறிவிப்புகளால்
ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியில் உத்வேகம்! பட்ஜெட், ரெப்போ விகித அறிவிப்புகளால்
ADDED : பிப் 10, 2025 07:29 AM

கோவை: ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு, தங்கத்தின் விலை அதிகரிப்பு, பட்ஜெட் அறிவிப்புகள் போன்றவற்றால் ரியல் எஸ்டேட் துறை மிக வேகமாக வளரும் என நம்பிக்கை உருவாகியுள்ளது.
இந்திய ரியல் எஸ்டேட் துறை, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டது. 2021ம் ஆண்டில் முதல் அரையாண்டில் 40 சதவீதத்துக்கும் மேல் தேங்கியது. 2024ல் ரியல் எஸ்டேட் துறை ஓரளவு மீட்சி பெற்றது.
எனினும், முக்கிய நகரங்களில் அதீத விலை உயர்வு நடுத்தர மக்களை ரியல் எஸ்டேட் முதலீடுகளில் இருந்து ஒதுங்கச் செய்தது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வும், இத்துறையின் தேக்கத்துக்கு காரணமானது.
இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்புகள், தங்கத்தின் விலை, ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு என அடுத்தடுத்த காரணிகள், ரியல் எஸ்டேட் துறைக்கு பெரும் ஊக்கமளிப்பதாக உள்ளன.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வீட்டு வசதி குறித்த முன்மொழிவுகள், இரு வீடுகள் வைத்துக் கொள்ள அனுமதி, ரூ. 12 லட்சம் வரை வருமான வரி தேவையில்லை போன்றவை, மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரித்து, நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவை சாத்தியமாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கூட்டமைப்பின் (கிரெடாய்), கோவை தலைவர் குகன் இளங்கோ கூறியதாவது:
ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து, 6.25 சதவீதமாக அறிவித்துள்ளது. இதனால், வீட்டுக் கடன் மீதான வட்டி குறையும். இதர கடன்களின் மீதான வட்டியும் குறையும்போது, வீடு வாங்குவது எளிமையாகியுள்ளது. நடுத்தர மக்கள் தங்களின் சொந்த வீட்டுக் கனவை பூர்த்தி செய்ய நல்ல வாய்ப்பு.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பது, ரியல் எஸ்டேட் துறையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது. எனினும், தங்கம், பங்குச் சந்தை முதலீடுகள் ஏற்ற இறக்கத்தைக் கொண்டவை. நிலையானவை அல்ல. மற்ற முதலீடுகளைக் காட்டிலும், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு சீரான, நிலையான வளர்ச்சியைக் கொண்டது என்பதால் நம்பகத்தன்மை அதிகம். இதுவும், ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டை ஊக்குவிக்கும்.
மேலும், தனி நபர் வருமான வரியின் மீதான சலுகையும் ரியல் எஸ்டேட் துறைக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் ரியல் எஸ்டேட் துறையில் அதிக முதலீடு செய்ய பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.