/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேல்நிலைப்பள்ளிகளில் 'ரெட் ரிப்பன் கிளப்' பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்
/
மேல்நிலைப்பள்ளிகளில் 'ரெட் ரிப்பன் கிளப்' பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்
மேல்நிலைப்பள்ளிகளில் 'ரெட் ரிப்பன் கிளப்' பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்
மேல்நிலைப்பள்ளிகளில் 'ரெட் ரிப்பன் கிளப்' பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்
ADDED : நவ 13, 2024 07:27 AM
பொள்ளாச்சி : அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில், 'ரெட் ரிப்பன் கிளப்' பணிகளை தீவிரப்படுத்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பாடத்திட்டம் தவிர்த்து, சமூக சிந்தனையுள்ள பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் நோக்கில், பள்ளிதோறும் மன்றங்கள் துவங்கப்பட்டன.
தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், ரெட் ரிப்பன் கிளப், பசுமைப்படை உள்ளிட்ட இயக்கங்கள் வாயிலாக, பள்ளி வளாக துாய்மை, பிறருக்கு உதவுதல், சமூக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுதல் ஆகிய பண்புகளை வளர்க்கும் நோக்கில், இந்த மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், பல பள்ளிகளில் இந்த மன்றங்களின் செயல்பாடுகள், பெயரளவில் மட்டுமே உள்ளன.
காலையில் பள்ளி துவங்கியதில் இருந்து, மாலை வீடு திரும்பும் வரை, உடற்கல்வி, நுாலகம் உள்ளிட்ட இதர வகுப்புகள் அனைத்தும், முக்கிய பாடங்களுக்காக கையாளப்படுகின்றன. இதனால், மன அழுத்தம் ஏற்படுவதோடு, ஒழுக்கம், கீழ்படிதல், பிறருக்கு உதவுதல், பொது சேவையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பண்புகளின் முக்கியத்துவம், மாணவர்களுக்கு தெரிவதில்லை.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில், 'ரெட் ரிப்பன் கிளப்' பணிகளை தீவிரப்படுத்த பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திரிபுரா மாநிலத்தில், போதை ஊசி பயன்பாட்டினால், 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் போதை ஊசி பழக்கத்தை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பள்ளிகளில், போதை எதிர்ப்பு மன்றங்கள் வாயிலாகவும், 'ரெட் ரிப்பன் கிளப்' பணிகளை தீவிரப்படுத்த அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.

