‘இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி’ சிகிச்சை விழிப்புணர்வு கருத்தரங்கு
‘இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி’ சிகிச்சை விழிப்புணர்வு கருத்தரங்கு
UPDATED : நவ 23, 2026 09:20 PM
ADDED : நவ 23, 2026 09:20 PM
கோவை: நோய்களை துல்லியமாக கண்டறிவதுடன், அறுவை சிகிச்சைகளின்றி நவீன தொழில்நுட்பம் மூலம், சிகிச்சை அளிக்கும் ‘இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி’ துறை குறித்த சிறப்பு விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு, வரும் 29ல் நடக்கிறது.
இந்திய ரேடியாலஜி மற்றும் இமேஜிங் சங்கத்தின் (ஐ.ஆர்.ஐ.ஏ.,) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிளையின், கோவை மண்டல துணைப் பிரிவு மற்றும் கே.ஜி. மருத்துவமனை இணைந்து இக்கருத்தரங்கை நடத்துகிறது.
ரேஸ்கோர்ஸ், ஐ.டி.சி. ஓட்டலில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட ரேடியாலஜி நிபுணர்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் கருத்தரங்கை துவங்கி வைக்கிறார். ஐ.ஆர்.ஐ.ஏ., அமைப்பு தேசிய தலைவர் டாக்டர் அன்பரசு மற்றும் மூத்த இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறைத்தலைவர் டாக்டர் மேத்யூ செரியன் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
கருத்தரங்கில், சிக்கலான பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சையின்றி தீர்வு காணும் நவீன முறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, பக்கவாதம், கால்களில் ஏற்படும் ரத்த நாள அடைப்பு, கர்ப்பப்பையை அகற்றாமலே அதிக ரத்தப்போக்கு பாதிப்பை குணப்படுத்துதல் போன்றவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது.
