/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெரு நாய்களை அடைத்து வைப்பது சரியா?
/
தெரு நாய்களை அடைத்து வைப்பது சரியா?
ADDED : ஆக 13, 2025 09:23 PM

தெரு நாய்களை பிடித்து, காப்பகத்தில் அடைத்து பராமரிக்குமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறித்து, கோவை மக்கள் என்ன சொல்கிறார்கள்?
'பராமரிக்க வேண்டும்' தெருவுக்கு நான்கு நாய்கள் சுற்றுகின்றன. இரவில் கொஞ்சம் பயத்துடன் தான் நடமாட வேண்டியுள்ளது. காப்பகங்களில் வைத்து பராமரிப்பதால், மக்கள் பயமின்றி போகலாம். ஆனால், காப்பகத்தில் அவற்றை துன்புறுத்த கூடாது. -- ராஜாராம், வங்கி ஊழியர், வடவள்ளி
'நாய்களை சீண்டக்கூடாது' எ னக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். எல்லா ஊரிலும் தெரு நாய் நடமாட்டம் இருக்கிறது. சில நாய்களால் பாதிப்பு ஏற் படுவது உண்மைதான். அதே சமயம், நாமும் தெரு நாய்களை சீண்டக்கூடாது. பொறுமையாக கையாள தெரிந்தால், கடிக்காது. காப்பகத்தில் அவற்றை அடிக்காமல் பராமரித்தால் நல்லதுதான். - நித்யா, வியாபாரி, காந்திபுரம்
'காப்பகத்தில் அடைக்கலாம்' வீடற்ற நாய்களுக்கு, கருத்தடை செய்கிறோம், தடுப்பூசி போடுகிறோம் என்று நகராட்சி சொல்கிறது. ஆனால், நாய்கள் பெருகுவதும், நாய்க்கடி சம்பவங்களும் குறையவில்லை. காப்பகத்தில் அடைத்து மனிதாபிமானத்துடன் பராமரித்தால், நமக்கும் நிம்மதி, நாய்களுக்கும் நன்மை தான். - லீலா, இல்லத்தரசி, கூடலுார்
'விபத்துக்கு காரணம்' நாய்கள் துரத்தும்போது, இரு சக்கர வாகன ஓட்டிகள் பீதியாகி வேகம் அதிகரித்து, கட்டுப்பாடு இழந்து விபத்துக்கு ஆளாகின்றனர். ஆனால் நிறைய பேர் நாய்களை கண்டுகொள்வதே இல்லை. அவர்களை நாய்களும் எதுவும் செய்வதில்லை. இருந்தாலும் காப்பகத்தில் அடைத்தால் இரு தரப்புக்கும் பிரச்னை இல்லை. - கணேஷ், ஆட்டோ டிரைவர், காந்திபுரம்
தாமதம் கூடாது குழந்தைகளை ரோட்டில் விளையாட வைக்க முடியவில்லை. சென்னையில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை நாய்கள் கடித்த காட்சி அதிர்ச்சியாக இருந்தது.அதனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவு சரி தான். தாமதமின்றி நடைமுறை படுத்த வேண்டும். -- தங்கராஜ், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்
நல்லது தான்; ஆனால்... நாய்களால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றால், அவற்றை காப்பகத்தில் அடைப்பதே நிரந்தர தீர்வு. அதே சமயம், காப்பகத்தில் நாய்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அது மக்களுக்கும் தெரிய வேண்டும். -கண்ணன், கபடி வீரர்