/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேட்பது கிடைக்குமா? அரசு மருத்துவமனையை கொஞ்சம் கவனிங்க
/
கேட்பது கிடைக்குமா? அரசு மருத்துவமனையை கொஞ்சம் கவனிங்க
கேட்பது கிடைக்குமா? அரசு மருத்துவமனையை கொஞ்சம் கவனிங்க
கேட்பது கிடைக்குமா? அரசு மருத்துவமனையை கொஞ்சம் கவனிங்க
ADDED : ஜன 10, 2024 10:22 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தை ஒட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; டாக்டர், செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை நோயாளிகள் நலச்சங்கத்தினர் முன் வைத்தனர்.
பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை நோயாளிகள் நலசங்க கூட்டம், சப் - கலெக்டர் அலுவலகத்தில்நடந்தது. சப் - கலெக்டர் கேத்தரின் சரண்யா தலைமை வகித்தார். மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக, இருப்பிட மருத்துவ அலுவலர் சரவணபிரகாஷ் வரவேற்றார்.
மருத்துவமனை வளாகத்தில், தலைக்காய சிகிச்சை பிரிவுக்கு, 15 தீவிர சிகிச்சை படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், உறவினர்கள் தங்கும் வகையில் 1.9 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த ஆய்வக கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் நலன் கருதி, விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில், டாக்டர்கள் கார்த்திகேயன், ராஜேஷ்வரி, மாரிமுத்து, நோயாளி நலச் சங்க உறுப்பினர்களான பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன், நடராஜ், முருகானந்தம், கணபதி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் பேசியதாவது:
அரசு மருத்துவமனைக்கு சி.எஸ்.ஆர்., நிதி பெற வேண்டும்.தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களின் கட்டணங்களை ஒரே மாதியாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
மருத்துவமனை எதிரே வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்து உள்ளதால், போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும்.
நோயாளி நல சங்க கூட்டத்தை ஆண்டுக்கு ஒரு முறை நடத்துவதை தவிர்த்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும்.மருத்துவமனைக்கு நோயாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில், மருத்துவமனை எதிரே பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும்.
மருத்துவமனையில் டாக்டர், மருந்தாளுனர், செவிலியர் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும்.'சிடி' ஸ்கேன், எக்ஸ்ரே பயன்பாட்டை 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும். ரத்த வங்கிக்கு தனியாக ஆம்புலன்ஸ் வசதி தேவை.
மருத்துவமனை வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.குடியிருப்பை ஒட்டி உள்ள பிணவறையை இடமாற்றம் செய்ய வேண்டும். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
இவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.