தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரூபாய் நோட்டு காணாமல் போகும் காலம் நெருங்குகிறதா?

ரூபாய் நோட்டு காணாமல் போகும் காலம் நெருங்குகிறதா?

ரூபாய் நோட்டு காணாமல் போகும் காலம் நெருங்குகிறதா?


ADDED : நவ 24, 2026 02:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 02:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஒரு காலத்தில் வீட்டை விட்டு கிளம்பும் போது பர்ஸில் பணம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டவர்கள், இன்று பையில் மொபைல் இருக்கிறதா தொட்டுப் பார்த்து கொள்கிறார்கள். டீக்கடை முதல் நகை கடை வரை யு.பி.ஐ. பயன்பாடு இந்தியாவில் விசுவரூபம் எடுத்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் டிரான்ஸாக்சன் எனப்படும் மின்னணு பண பரிமாற்றம் தொடர்ந்து அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒருங்கிணைந்த கட்டண பரிவர்த்தனை அல்லது யு.பி.ஐ. என்கிற கட்டமைப்பு 2016 ஆகஸ்டில் துவங்கப்பட்டது. இன்று அதுவே அன்றாட பண பரிவர்த்தனையின் முக்கிய வழியாக மாறியுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 2026 ஜூன் நிலவரப்படி 55.49 கோடி பேர் யு.பி.ஐ. பயன்படுத்துகின்றனர்.

கடந்த நிதியாண்டில் 24,162 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் யு.பி.ஐ வாயிலாக நடந்துள்ளன. அதன் மொத்த மதிப்பு ரூ.314 லட்சம் கோடி. தேசிய பண பரிவர்த்தனை கழகத்தின் (என்.பி.சி.ஐ.) அக்டோபர் 2026 அறிக்கையின்படி, ஒரே மாதத்தில் 2,546 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. மதிப்பு ரூ.31.53 லட்சம் கோடி.

தேசிய அளவில் அதிகரித்து வரும் இந்த பயன்பாடு கோவையிலும் அன்றாட வியாபாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களில் 60 -முதல் 70 சதவீதம் பேர் யு.பி.ஐ பயன்படுத்துவதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

டீ கடையில் ரூ.10, ரூ.20க்கு டீ வாங்குபவர்கள்கூட க்யூ.ஆர். கோடு வாயிலாக பணம் செலுத்துகின்றனர். தள்ளுவண்டி கடைகளிலும் கியூ.ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர். காய்கறி கடைகளில் சில்லறை இல்லாமால் பொருட்களை வாங்காமல் செல்லும் நிலை மாறி, யு.பி.ஐ உதவுகிறது. இதனால் ரூ.5, ரூ.10 போன்ற சிறிய தொகைகளிலும் விற்பனை வருவாய் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர்களும் பயணிகளிடம் சில்லறை இல்லாதபோது க்யூ.ஆர். கோடு வாயிலாக கட்டணம் பெறுகின்றனர். துணிக்கடைகளில் பல ஆயிரம் தொகைகளை வாடிக்கையாளர்கள் மொபைல் அல்லது கார்ட் வாயிலாக செலுத்துகின்றனர்.

“ஒரு இளநி கேப்பாங்க. சீவி குடுப்பேன். குடிச்சுட்டு காயை நீட்டுவாங்க. வழுக்கைய நோண்டி குடுப்பேன். சாப்டுட்டு 500 ரூபா நோட்ட நீட்டுவாங்க. எத்தன பேருக்கு எங்க போய் சில்லர மாத்தி குடுக்க முடியும், சொல்லுங்க. பேங்ல வேல செய்ற ஒரு கஸ்டமர் தம்பி தான் இந்த ஸ்டிக்கர் அட்டைய கொண்டாந்து வச்சாரு. யாரு எவ்ள பணம் குடுத்தாங்கன்னு ஸ்பீக்கர்ல குரல் வரும். கேட்டுகிட்டே அடுத்த கஸ்டமருக்கு காய் சீவுவேன். சில்லர தேட அவசியம் இல்ல, நேரம் மிச்சம், கஸ்டமரும் ஜாஸ்தி ஆயிட்டாங்க. ரொம்ப உதவியா இருக்குங்க..” என்று சிலாகிக்கிறார் ஆவாரம்பாளையம் பழனிசாமி.

எல்லாமே பயனுள்ளதா என்றால் தலையை இடம் வலமாக ஆட்டுகிறார், ஒரு அரசு அதிகாரி.

“கிரெடிட் கார்டுக்கு இப்படித்தான் மயங்கினார்கள். அது ஏதோ கடவுள் கொடுத்த காசு என்று நினைத்து தாராளமாக கார்டு தேய்த்தார்கள். வட்டியும் முதலுமாய் வசூலிக்க வீடு தேடி ரெக்கவரி ஏஜன்டுகள் வந்தபோது தான் முழித்தார்கள். அதுபோல டிஜிட்டல் பேமென்டும் ஒரு விதமான மயக்கம்” என்கிறார் அவர்.

குடும்ப தலைவிகள் சிலர் அந்த கருத்தை ஆமோதிக்கிறார்கள். ”பால், தயிர் விற்பவர்கள் கூட கியூ ஆர் கோடு வைத்திருப்பது நமக்கு வசதியாக இருக்குங்க. பணம் வச்சிருந்து, எடுத்து, எண்ணி குடுக்றது, மிச்ச காசு சரியான்னு பாக்குறது எல்லா தொல்லையும் போயாச்சு. ஆனா, மாச கடைசில பாத்தா ஒவ்வொரு மாசமும் செலவுகள் ஏறிகிட்டே போகுது. விலைவாசி உயர்வு மட்டும்தான் காரணமான்னு சொல்ல முடியல. ரூபா நோட்டை கொடுத்து பொருள் வாங்கும்போது இருக்ற ஜாக்கிரதை, மொபைல்போன் வழியா பணம் செலுத்தும்போது வரலைனு தோணுது” என்றார்கள்.

அலுவலகம் செல்லும் இளைஞர் ஒருவர், “கேஷ் குடுத்து 2 டீ மட்டும் குடிச்சுகிட்டு இருந்தேங்க. இப்ப எனக்கே தெரியாம 5 அல்லது 6 டீ குடிக்கிறேன். ஒவ்வொரு டீக்கும் பிஸ்கட் வேற சேத்து வாங்குறேன். யுபிஐ தான் வில்லன், நோ டவுட்” என்று சிரிக்கிறார்.

இனிமேல் ரொக்க பரிவர்த்தனைக்கு திரும்புவது சாத்தியம் இல்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். “இப்பவே பர்ஸ் வச்சுக்கிற பழக்கம் நின்னாச்சு. ரூபா நோட்டை கையால தொட்டே பல நாள் ஆச்சு. இப்பவே கிழிஞ்சு தொங்குற கரன்சிதான் நடமாடிட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நாளில் எல்லா நோட்டும் செல்லாதுனு அறிவிக்க போறாங்க, பாருங்க” என்று பீதியை கிளப்புகிறார், ராம்நகர் கோயில் முன் தரையில் அமர்ந்திருக்கும் யாசகர்.

அவர் அருகில் பளிச்சென்று உட்கார்ந்திருந்தது பேடியெம் கியுஆர் கோடு அட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us