முக்கோணத்தில் ரவுண்டானா அமையுமா? கிடப்பில் கோரிக்கை
முக்கோணத்தில் ரவுண்டானா அமையுமா? கிடப்பில் கோரிக்கை
UPDATED : நவ 26, 2026 07:17 PM
ADDED : நவ 26, 2026 07:17 PM
உடுமலை: முக்கோணம் சந்திப்பில் விபத்துகள் அதிகரித்தும், ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை; நீண்ட கால கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கோவை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, ஆனைமலை ரோடு சந்திக்கும் சந்திப்பு பகுதி முக்கோணத்தில் அமைந்துள்ளது.
ஆனைமலை பகுதியில் இருந்து உடுமலை நோக்கி வரும் வாகனங்கள் இந்த சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது. நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக வரும் போது, இணைப்பு ரோட்டில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், ஆனைமலை ரோட்டில் மட்டும் சென்டர்மீடியன் அமைக்கப்பட்டது. இருப்பினும் நெரிசலும், விபத்துகளும் குறையவில்லை.
அதே இடத்தில் பொள்ளாச்சி மற்றும் உடுமலை நோக்கி வரும் பஸ்கள், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணியரை ஏற்றுகின்றன. இது அப்பகுதியில் மேலும் அதிகமாக்குகிறது.
காலை, மாலை நேரங்களில், அவசர கதியில் வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது. அங்குள்ள உயர் மின் கோபுர விளக்கும் எரியாததால், இரவு நேரங்களிலும், பிரச்னைகள் ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, முக்கோணத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது.
இந்த கட்டமைப்பை ஏற்படுத்தினால், தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் வேகத்தை குறைக்கும்; ஆனைமலை ரோட்டுக்கு செல்பவர்கள் நெரிசல் இல்லாமல் சந்திப்பு பகுதியை கடக்கலாம்.
அங்கு நிலவும் அத்தனை குளறுபடிகளுக்கும், தீர்வு கிடைக்கும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, பூலாங்கிணறு ஊராட்சியிலும் சில ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கும், நெடுஞ்சாலைத்துறையினருக்கும் அனுப்பினர். எவ்வித நடவடிக்கையும் இல்லை.
தற்போது பாதசாரிகளும் அப்பகுதியை கடக்க முடியாத அளவுக்கு நெரிசல் அதிகரித்துள்ளது. நீண்ட கால கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
