/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று
/
3 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று
ADDED : மார் 26, 2025 09:07 PM

பொள்ளாச்சி; கோவை மாவட்டத்தில், மூன்று போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி கிழக்கு, தாலுகா, மகாலிங்கபுரம் ஆகிய மூன்று போலீஸ் ஸ்டேஷன்கள், ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெற தகுதி பெற்றன. இந்த ஸ்டேஷன்களில், பதிவேடுகளை முறையாக பராமரித்தல், பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுத்தல், கண்டறிதல், விசாரணை செய்தல், போலீஸ் ஸ்டேஷன் அதிகார வரம்பிற்குள் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை பராமரித்தல் மற்றும் அவசர நிலைகளுக்கு உடனடி பதில் அளித்தல் போன்றவைக்காக, ஐ.எஸ்.ஓ., 9001: 2015 சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
மேலும், போலீஸ் ஸ்டேஷன்களின் பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ததற்காக இந்திய தர கவுன்சிலிடமிருந்து பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிப்பீட்டு விருதையும் இந்த போலீஸ் ஸ்டேஷன்கள் பெற்றுள்ளன.
இந்த விருதை, எஸ்.பி., கார்த்திக்கேயன், கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங் ஆகியோர், இன்ஸ்பெக்டர்கள் சந்திரலேகா, முருகனிடம் வழங்கினர். மேலும், எஸ்.ஐ.,க்கள் கவுதம், நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
எஸ்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், முதற்கட்டமாக மூன்று ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று பெறப்பட்டுள்ளது. இதுபோன்று, மற்ற ஸ்டேஷன்களுக்கு சான்றிதழ் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசாருக்கு ஊக்கமளிக்கும்.
பொது இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக, பொதுமக்களுக்கு நம்பிக்கையும், குற்றவாளிகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தும்.
குற்றங்களை தடுக்கவும், குறைக்கவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.