/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை ரோட்டில் பஸ்கள் அசுர வேகம் தனியார்களை கட்டுப்படுத்துவது அவசியம்
/
கோவை ரோட்டில் பஸ்கள் அசுர வேகம் தனியார்களை கட்டுப்படுத்துவது அவசியம்
கோவை ரோட்டில் பஸ்கள் அசுர வேகம் தனியார்களை கட்டுப்படுத்துவது அவசியம்
கோவை ரோட்டில் பஸ்கள் அசுர வேகம் தனியார்களை கட்டுப்படுத்துவது அவசியம்
ADDED : அக் 03, 2024 04:58 AM
பொள்ளாச்சி : கோவை - பொள்ளாச்சி இடையே விதிமீறி இயக்கப்படும் தனியார் பஸ்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி- - கோவை இடையே, இரண்டு நிமிட இடைவெளியில், 35 அரசு மற்றும் 16 தனியார் என, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள், ஆச்சிப்பட்டி, கோவில்பாளையம், தாமரைக்குளம், கல்லாங்காட்டுபுதுார், கிணத்துக்கடவு, மரத்தோப்பு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி, சுந்தராபுரம், குறிச்சி ஆகிய நிறுத்தங்களில் பயணியரை, ஏற்றி இறக்கி உக்கடம் சென்றடைய வேண்டும்.
'எக்ஸ்பிரஸ்' அரசு பஸ்கள், கோவில்பாளையம், கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி, குறிச்சி ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும். இதில், பெரும்பாலான தனியார் பஸ்கள், இந்த நிறுத்தங்களில் நிறுத்தப்படுவதில்லை.
மாறாக, காலை மற்றும் மாலை நேரங்களில், பொள்ளாச்சியில் இருந்து புறப்படும்போதே, 'பைபாஸ் கோவை' என்று பயணியரை கூவி அழைத்து, ஏற்றிச் செல்கின்றனர். அச்சமயம், கோவில்பாளையம், கிணத்துக்கடவு என, இடையே உள்ள ஊர்களுக்கு செல்ல முற்படும் பயணியரை பஸ்சில் ஏறவும் அனுமதிப்பதில்லை.
இது ஒருபுறமிருக்க, கோவை நோக்கி இயக்கப்படும் தனியார் பஸ்கள், 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுவதாகவும் பயணியர் புகார் தெரிவிக்கின்றனர்.
பயணியர் கூறியதாவது:
கடந்த காலத்தில், பொள்ளாச்சி - கோவை இடையே குறுகிய சாலை மட்டுமே இருந்ததால், அரசு பஸ்களை, முந்திக் கொண்டு பயணியரை ஏற்ற வேண்டும் என்பதற்காக, போட்டி போட்டு அதிவேகமாக தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.
தற்போது, நான்கு வழிச்சாலையாக உள்ள நிலையில், இடையே உள்ள நிறுத்தங்களை தனியார் பஸ்கள் தவிர்க்கின்றன. வேகக் கட்டுப்பாடு முழுமையாக பின்பற்றப்படுவதில்லை. மக்கள் நடமாட்டம் உள்ள நகரத்திற்கு உள்ளேயும், வேகத்தை குறைக்காமல் டிரைவர்கள் பஸ்சை இயக்குகின்றனர்.
முறையாக சீருடை அணிவது, 'நேம் பேட்ஜ்' அணிவது என எந்தவித விதிமுறைகளையும், சில டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கடைபிடிப்பதில்லை. விதிமீறும் தனியார் பஸ்களின் இயக்கத்தைக் கண்டறிந்து தடுக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.