/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் குளங்களை தூர்வாருவதற்கு சாத்தியம் இல்லை! அதிகாரிகள் பதிலால் விவசாயிகள் விரக்தி
/
சூலுார் குளங்களை தூர்வாருவதற்கு சாத்தியம் இல்லை! அதிகாரிகள் பதிலால் விவசாயிகள் விரக்தி
சூலுார் குளங்களை தூர்வாருவதற்கு சாத்தியம் இல்லை! அதிகாரிகள் பதிலால் விவசாயிகள் விரக்தி
சூலுார் குளங்களை தூர்வாருவதற்கு சாத்தியம் இல்லை! அதிகாரிகள் பதிலால் விவசாயிகள் விரக்தி
ADDED : ஜூன் 04, 2025 08:06 AM

சூலுார்; சூலுாரில் உள்ள இரு குளங்களிலும், தற்போது முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளதால், குளங்களை தூர்வாரும் சாத்திய கூறுகள் இல்லை, என, அதிகாரிகள் கூறியுள்ளதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில், 100 ஏக்கர் பரப்பில் பெரிய குளம் மற்றும், 80 ஏக்கர் பரப்பளவில் சின்ன குளம் உள்ளன. பவானிசாகர் அணைக்கோட்ட நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளங்களில் தேக்கி வைக்கப்படும் நீரால், சுற்றுவட்டார விவசாய நிலங்களும், விவசாயிகளும் பயன்பெற்று வருகின்றனர். நொய்யல் ஆற்றில் உள்ள ராவத்தூர் தடுப்பணையில் இருந்து ராஜ வாய்க்கால் வழியாக இக்குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடுவது வழக்கம்.
கழிவு நீர் :
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நொய்யல் ஆற்றில் ஓடும் கழிவு நீர் தான் குளங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால், குளங்களில் டன் கணக்கில் கழிவுகள் தேங்கி உள்ளன. நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
குளங்களை தூர் வாரி, கழிவுகளை அகற்ற வேண்டும், என, விவசாய சங்கங்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறியதே இல்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில்,' சூலுார் வட்டார விவசாயத்துக்கு ஜீவனாக இருக்கும் சூலுார் குளங்களை தூர் வாரி, 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கழிவு நீர் தேக்கப்பட்டு, வெளியேற்றப்படுவதால், விவசாய விளைபொருட்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அந்த நீரால் கொடிய நோய்களும் உருவாகி விவசாயிகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி குளங்களை தூர் வார வேண்டும், என, கூறப்பட்டுள்ளது.
அதற்கு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அளித்துள்ள பதிலில், சூலுாரில் உள்ள பெரிய குளம், சின்ன குளத்தில் தற்போது, முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளதால், தற்போது குளத்தை தூர் வாரும் சாத்திய கூறுகள் இல்லை, என, கூறப்பட்டுள்ளது.
இதேபோல், அரசூரை சேர்ந்த இயற்கை விவசாயி ராமசாமி, முதல்வருக்கு அனுப்பிய மனுவில், நொய்யல் ஆற்றில் தற்போது வெள்ளம் செல்வதால், குளங்களில் உள்ள கழிவு நீரை வெளியேற்றி, மழை நீரை குளங்களுக்கு திருப்பி விட வேண்டும், என கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கு கோவை பாசன உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அம்சராஜ் அளித்த பதிலில், நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகம் வரும்போது, முறை சார்ந்த குளங்களுக்கு மழைநீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனுதாரர்கள் கூறுகையில்,' எத்தனை முறை மனு அளித்தாலும் இதே பதிலைத் தான் அதிகாரிகள் கூறுகின்றனர். கோடை காலத்தில் குளங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும்.
அப்போது இருக்கும் கழிவு நீர் மற்றும் கழிவுகளை அகற்றி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, குளத்தில் நீர் அதிகமாக உள்ளது. அதனால் தூர் வார முடியாது, என கூறுவது வாடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு முறையும் பருவ மழைக்கு முன் தூர்வார வேண்டும் எனக்கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், எதுவும் நடப்பதே இல்லை,' என்றனர்.