ADDED : செப் 13, 2026 06:32 PM
மேட்டுப்பாளையம்: ‘விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா, மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து, ஹிந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:
சிறுமுகைப் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக, வாகனங்களில் எடுத்துச் சென்று, பழத்தோட்டத்தில் பவானி ஆற்றில் கரைக்க உள்ளனர். நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் வைக்கப்படும் சிலைகள், கோவை சாலையில் உள்ள சி.டி.சி., டெப்போ அருகே இருந்து பஸ் ஸ்டாண்ட், ஊட்டி சாலை, பழைய நகராட்சி அலுவலகம் வழியாக, சுப்பிரமணியர் சுவாமி கோவிலை அடையும். அங்கு பவானி ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும்.
காரமடை நகரம் மற்றும் கிராமப் பகுதியில் வைக்கப்படும் சிலைகள், வெள்ளியங்காடு சாலை, கணுவாய்பாளையம் பிரிவு சாலை, தேக்கம்பட்டி சாலை வழியாக, வனபத்ரகாளியம்மன் கோவிலை அடைந்து, பவானி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும். மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்லும் சாலைகளில், பல இடங்களில் குழிகள் உள்ளதால், சாலைகளை சீரமைக்க வேண்டும்.
சிலைகளுக்கு இடையூறு இல்லாத வகையில், மரக்கிளைகளை வெட்ட வேண்டும். 14ம் தேதியிலிருந்து, 16ம் தேதி வரை மின்தடை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். 16ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு, பவானி ஆற்றில் நீரோட்டம் இருக்க வேண்டும்.
சிலைகள் இரவில் விசர்ஜனம் செய்ய இருப்பதால், இடங்களில், மின் விளக்குகள் வசதி செய்ய வேண்டும். ஊர்வலம் நடைபெறும் நாளில், டாஸ்மாக் மது கடைகள் அடைக்கவும், ஊர்வலம் நடக்கும் 16ம் தேதி மதியம் ஒரு மணிக்கு மேல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.
