பொள்ளாச்சி - வால்பாறை ரோடு விரிவாக்க பணியால் பசுமை பறிபோகும்! 98 மரங்களை வெட்ட அனுமதி கோரியதற்கு எதிர்ப்பு
பொள்ளாச்சி - வால்பாறை ரோடு விரிவாக்க பணியால் பசுமை பறிபோகும்! 98 மரங்களை வெட்ட அனுமதி கோரியதற்கு எதிர்ப்பு
UPDATED : ஆக 23, 2026 04:37 PM
ADDED : ஆக 23, 2026 04:31 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் கூடுதல் பாலம் மற்றும் சாலை விரிவாக்கத்துக்காக, 98 மரங்கள் வெட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறையிடம் அனுமதி கோரியுள்ளது. ஆய்வுக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளிடம், இயற்கை ஆர்வலர்கள், அனைத்து மரங்களையும் வெட்டாமல் மாற்றுத்திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் சாலை விரிவாக்கம், வளர்ச்சிப்பணிகளுக்காக பல ஆண்டுகளாக வளர்ந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. இதனால், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட ரோடுகளில், ஒதுங்கக்கூட நிழல் இல்லாத சூழல் ஏற்பட்டது.
இதற்கு மாற்று திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை எழுந்தது. ஒரு சில இடங்களில் மரங்கள் வெட்டாமல் மறு நடவு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் விரிவாக்கப்பணிக்காக, 98 மரங்கள் வெட்டப்பட உள்ள தகவல், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சாலை விரிவாக்கம் பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வால்பாறை, ஆழியாறு சுற்றுலாத்தலமாக உள்ளதால் இந்த ரோட்டில் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் அருகில், நா.மூ., சுங்கம் பாலம் அருகே கூடுதல் பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பழைய பாலம், ரோடு இருந்த இடத்தில் சாலை மற்றும் பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, மத்திய அரசின் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், மொத்தம், 19.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 10 மீட்டர் அகலம், 100 மீட்டர் நீளம் கொண்ட பாலமும், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் முதல், நா.மூ., சுங்கம் வரை, 800 மீட்டருக்கு நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது. தற்போது, பாலம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
வருவாய்த்துறை ஆய்வு இந்த பணிகளுக்காக மரங்களை வெட்ட வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை வாயிலாக வருவாய்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், பாலாற்றின் குறுக்கே கூடுதல் உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பாலம் அமைய உள்ள இடத்தின் வலது புறத்தில் உள்ள, 98 மரங்கள் வெட்ட வேண்டியதுள்ளது. இந்த மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமையில் அதிகாரிகள் குழுவினர், ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு வந்த இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள், '98 மரங்களையும் வெட்ட அனுமதிக்க கூடாது; பசுமை பறிபோய்விடும். எனவே, மாற்று திட்டமாக மறுநடவு செய்ய வேண்டும், வெட்ட வேண்டிய மரங்களை மட்டும் வெட்ட அனுமதித்தால் போதுமானது,' என வலியுறுத்தினர்.
அப்போது அதிகாரிகள், 'மரங்கள் குறித்து ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
