மூன்று இடங்களில் மேம்பாலம் வேண்டும்! தரைமட்ட பாலங்களால் அபாயம்
மூன்று இடங்களில் மேம்பாலம் வேண்டும்! தரைமட்ட பாலங்களால் அபாயம்
UPDATED : செப் 23, 2026 07:28 AM
ADDED : செப் 22, 2026 05:23 PM

பெ.நா.பாளையம்: மழைக்காலங்களில் தரைப்பாலத்தின் மீதும், ரயில்வே பாலத்துக்கு அடியிலும் வெள்ள நீர் பெருக்கெடுப்பதால், போக்குவரத்து தடைபடுகிறது. எனவே, புதுப்பாளையம், வீரபாண்டி பிரிவு, கோட்டைப் பிரிவு ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. புதுப்பாளையம்
மழைக்காலங்களில், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே புதுப்பாளையம் தடுப்பணையில் நீர் நிறைந்து, அங்குள்ள ரயில் பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுப்படுத வாடிக்கை. அந்த சமயங்களில், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும்.
வீரபாண்டி பிரிவு
மேட்டுப்பாளையம் ரோடு, வீரபாண்டி பிரிவு அருகே ரயில்வே பாலம் அருகே ஓடையின் குறுக்காக தரைமட்ட பாலம் அமைந்துள்ளது. மழைக்காலத்தில், தரைப்பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்துப் பாயும். அச்சமயங்களில் வீரபாண்டி, சாமநாயக்கன்பாளையம், நாயக்கனூர், காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையை அடையமுடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்படும்.
கோட்டைப் பிரிவு
மேட்டுப்பாளையம் ரோடு, கோட்டை பிரிவு ரயில்வே பாலத்தின் அருகே உள்ள தரைப்பாலத்திலும் இதே நிலைதான். ஒன்னிபாளையம், ஒன்னிபாளையம் புதூர், கரிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டை அடைய முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து வாகனம் அடித்துச் செல்லப்பட்டு, உயிர்ப்பலியும் நிகழ்ந்திருக்கிறது.
எனவே, இந்த மூன்று இடங்களிலும் ரயில்வே மேம்பாலம் அமைத்து போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.
இப்பகுதி மக்கள் கூறியதாவது:
கோட்டைப்பிரிவு, வீரபாண்டி பிரிவு, புதுப்பாளையம் பகுதிகளில் குடியிருப்புகள், வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் பெருகிவிட்டன. வாகனப்பெருக்கத்தைக் கணக்கிட்டு, மிக விரைவில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
