தலா ரூ.1.5 லட்சத்தில் சீரமைத்த வீடுகள் மழைக்கு ஒழுகுது!மக்கள் துயர் துடைப்பார்களா அதிகாரிகள்
தலா ரூ.1.5 லட்சத்தில் சீரமைத்த வீடுகள் மழைக்கு ஒழுகுது!மக்கள் துயர் துடைப்பார்களா அதிகாரிகள்
UPDATED : ஆக 27, 2026 06:50 PM
ADDED : ஆக 27, 2026 06:21 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சென்றாம்பாளையம் பிரிவில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்ட தொகுப்பு வீடுகள், கடந்தாண்டு சீரமைக்கப்பட்டன. ஆனால், சரியான முறையில் பணி மேற்கொள்ளாததால், மழைக்கு வீடுகள் ஒழுகுவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கிணத்துக்கடவு வட்டாரத்தில் பல கிராமங்களில் அரசு திட்டத்தின் கீழ், கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இதில், தாமரைக்குளம், சென்றாம்பாளையம் பிரிவு நரிக்குறவர் காலனியில், 32 வீடுகள் கட்டப்பட்டன. அதன்பின், இந்த வீடுகளை சீரமைப்பு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால், வீடுகளின் மேற்கூரை சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில், சில வீடுகள் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டின் வெளியில் தங்கி வந்தனர். அதிக மழை பெய்யும் போது, மண்டபம் போன்ற பொதுஇடங்களில் தங்க வைக்கப்பட்டு வந்தனர்.
மேலும், சிலர் ஓரிரு மாதங்களுக்கு மட்டும் வெளியூரிலும், வேலை செய்யும் இடத்திலும் தங்கியுள்ளனர். இந்நிலையில், மக்கள் நலன் கருதி பலவீனமான வீடுகளை சீரமைக்க கடந்த, 2024 - 25 நிதியாண்டில், ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டம் வாயிலாக, 14 வீடுகளுக்கு தலா, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டது.
இந்த வீடுகளுக்கு, மேற்கூரைக்கு பதில் ஓடுகள் அமைக்கப்பட்டது. அதில், போதுமான சரிவில் ஓடுகள் அமைக்காததால், வீட்டுக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். வீடுகளை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கூறியதாவது:
சேதமடைந்திருந்த வீடுகள் கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. ஆனால், சீரமைக்கப்பட்ட வீடுகளில் மழை காலத்தில் தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் வீட்டின் வெளிப்புறத்தில், தனியாக சிமென்ட் சீட்டில் ெஷட் அமைத்தும், உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைகிறோம். குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எளிதாக நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
வீட்டினுள் தேங்கும் மழை நீரை அகற்றம் செய்ய பல மணி நேரமாகிறது. தற்போது, மழைக்கு வீடுகள் ஒழுகாமல் இருக்க, மேற்பரப்பில் ஓடுகளின் மீது தார்பாலின் சீட்டு மற்றும் பிளக்ஸ்கள் போர்த்தி சமாளிக்கின்றோம்.
வீட்டை சீரமைக்க நிதி ஒதுக்கிய நிலையிலும், வீட்டினுள் மழைநீர் ஒழுகுகிறது. இதை அதிகாரிகள் கவனித்து மீண்டும் நல்ல முறையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'வீடுகள் சீரமைப்புக்காக, பயனாளி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் பணம் வரவு வைத்தபின், வீடு சீரமைப்பு பணியை பயனாளிகள் மேற்கொண்டனர். இந்நிலையில், சீரமைக்கப்பட்ட வீடுகளில் மழை நீர் ஒழுகுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
