தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிரச்னைக்கு தீர்வு காணும் வடிவமைப்புக்கு ஜேம்ஸ் டைசன் விருது

பிரச்னைக்கு தீர்வு காணும் வடிவமைப்புக்கு ஜேம்ஸ் டைசன் விருது

பிரச்னைக்கு தீர்வு காணும் வடிவமைப்புக்கு ஜேம்ஸ் டைசன் விருது


ADDED : செப் 24, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை, செப். 25:

கல்லூரி வளாகத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலை.

பெரிய வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாத பகுதிகளில் பாதுகாப்பு பணியாளர்களும் இதே சிரமத்தை சந்தித்தனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் உருவானதுதான் மூன்று சக்கர மின்சார ரோந்து வாகனம் ‘டிரைக் 2π’.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படித்த ஷகில் அக்தர், தற்போது அதே கல்லூரியில் தொழில்துறை தானியங்கி மற்றும் ரோபோட்டிக்ஸ் முதுகலை படித்து வருகிறார். 2022-ல் தொடங்கிய முயற்சி, முதலில் மூன்று சக்கரம், பேட்டரி, மோட்டார் கொண்ட எளிய மாதிரியாக இருந்தது.

அதை கல்லூரி பாதுகாப்புப் பணியாளர்களிடம் பயன்படுத்தக் கொடுத்து, அவர்களின் கருத்துகளைப் பெற்றார். கைப்பிடியின் உயரத்தை மாற்றும் வசதி, சஸ்பென்ஷன், பிரேக், தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதி உள்ளிட்ட மாற்றங்கள் கருத்துகளின் அடிப்படையில் செய்யப்பட்டன.

பின்னர், மக்கள் நடமாடும் பகுதிகளில் ரோந்து செல்லும் போலீசாருக்கும் இதுபோன்ற வாகனம் தேவைப்படுவது தெரியவந்தது. பூங்காக்கள், நடைபாதைகள் போன்ற பகுதிகளில் ஜீப் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்ல முடியாததால், போலீசாருக்காக வாகனம் மாற்றியமைக்கப்பட்டது. 2024ல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் போலீசாருக்காக முதற்கட்டமாக சோதனை செய்யப்பட்டது.

அடுத்ததாக ரயில்வே பாதுகாப்புப் படையினரின் தேவைக்கேற்ப வாகனத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. நீண்ட நடைமேடைகளில் பல மணி நேரம் ரோந்து செல்ல வேண்டியிருப்பதால், அவர்களுக்கேற்ற பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டன. 2025 நவம்பரில் மாதிரி வாகனம் வழங்கப்பட்ட நிலையில், 2026-ல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயன்படுத்த 10 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மூன்று சக்கரங்களுக்கும் தனித்தனி சஸ்பென்ஷன் அமைப்பு இருப்பதால் சீரற்ற தரைப்பகுதிகளிலும் செல்ல முடியும். ஐந்து அடி சுற்றளவுக்குள் 360 டிகிரி திரும்பும் வசதி இருப்பதால் குறுகிய இடங்களிலும் எளிதாக இயக்க முடியும். ரோந்து பணிக்காக ஒலிபெருக்கி, சைரன், ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன.ஒருமுறை சார்ஜ் செய்ய  இரண்டரை மணி நேரம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் 25 முதல் 30 கி.மீ., வரை செல்ல முடியும். 

இந்த முயற்சிக்கு மற்றொரு முக்கிய அங்கீகாரமாக, 2026ம் ஆண்டுக்கான ஜேம்ஸ் டைசன் விருதில் இந்திய அளவில் தேசிய ரன்னர்-அப் என்ற பெருமை கிடைத்துள்ளது.

இந்த விருது குறித்து ஷகில் கூறுகையில், “ஜேம்ஸ் டைசன் விருது என்பது பொறியியல் வடிவமைப்புக்கான போட்டி. இதில் ஒரு வாகனம் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்பது மட்டும் முக்கியமல்ல. எந்தப் பிரச்சனையை கண்டறிந்தோம், அதைத் தீர்ப்பதற்காக எப்படி வடிவமைத்தோம் என்பதுதான் முக்கியம்,” என்றார்.

ஒரு மாணவரின் தனிப்பட்ட நடமாட்டச் சிக்கலில் தொடங்கிய யோசனை, பாதுகாப்புப் பணியாளர்களின் தேவையை புரிந்து கொண்டு வளர்ந்து, இன்று போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் பணியில் பயன்படுத்தப்படும் வாகனமாக மாறியுள்ளது. பிரச்னையை கண்டறிந்து, அதற்கான தீர்வை உருவாக்கிய இந்தப் பயணத்துக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகவே ஜேம்ஸ் டைசன் விருதையும் பார்க்கிறார் ஷகில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us