/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களிடம் நகை பறிப்பு; ரோந்து அதிகரிக்க கோரிக்கை
/
பெண்களிடம் நகை பறிப்பு; ரோந்து அதிகரிக்க கோரிக்கை
ADDED : டிச 09, 2024 07:00 AM
கோவை: கோவை மாநகரில் மீண்டும் நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. இவற்றை நிரந்தரமாக தடுக்க, ரோந்து கண்காணிப்பை போலீசார் முடுக்கி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவை மாநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரவுடிகளின் அட்டூழியம், வழிப்பறி, நகை பறிப்பு, கொள்ளை நடந்து வந்தது. இதனை தடுக்க, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதன் வாயிலாக கோவையில் ரவுடிகளின் எண்ணிக்கை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. வழிப்பறி, நகை பறிப்பு, கொள்ளை சம்பவங்களை தடுக்க கமிஷனர், போலீசாரின் ரோந்து நேரத்தை மாற்றி அமைத்தார்.
அதன்படி மாநகரில் பெருமளவில் வழிப்பறி, நகை பறிப்பு, கொள்ளை சம்பவங்கள் குறைந்தன. இதையும் மீறி நகை பறிப்பு சம்பவம் நடந்தால், உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், தற்போது நகை பறிப்பு சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில், மாநகரில் வெவ்வேறு இடங்களில், மூன்று பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
* கோவை ஆர்.எஸ்.புரம், பி.எம்.சாமி காலனியை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 43. கவுண்டம்பாளையத்தில் உள்ள, தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பணியை முடித்து விட்டு, தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தடாகம் ரோடு, டி.வி.சாமி ரோட்டில் வந்த போது அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். அப்போது அவரது அருகே நடந்து வந்த மர்ம நபர் ஒருவர், புவனேஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த, 4 பவுன் தங்க நகையை பறித்து தப்பி சென்றார்.
* கோவை பி.என்.புதுாரை சேர்ந்தவர் கலைச்செல்வி, 57; சமையல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் எம்.ஜி.,காலனி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் வந்தனர். அவர்கள் கலைச்செல்வி அருகே ஸ்கூட்டரை நிறுத்தி, திடீரென அவரது கழுத்தில் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்க நகையை, பறித்து தப்பிச் சென்றனர். கலைச்செல்வி வடவள்ளி போலீசில் புகார் அளித்தார்.
* கோவை நீலாம்பூரை சேர்ந்தவர் சுபா, 33. இவர் மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம், சுபா வீட்டிற்கு செல்வதற்காக, பீளமேடு பகுதியில் தனது கணவருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென சுபா கழுத்தில் அணிந்திருந்த, 3 பவுன் தாலியை பறித்து தப்பி சென்றார்.
இந்த மூன்று புகார்களின் பேரில், அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
நகைப்பறிப்பு சம்பவங்கள் நடந்த பகுதிகளில், உள்ள பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
நகை பறிப்பு சம்பவங்கள் மீண்டும் நடப்பதை தடுக்க, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், இருட்டு அதிகம் உள்ள பகுதிகளில், தொடர்ந்து ரோந்து செல்ல போலீசாருக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.