/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிரப்பள்ளி ரோட்டில் பஸ்சை மறித்த 'கபாலி'
/
அதிரப்பள்ளி ரோட்டில் பஸ்சை மறித்த 'கபாலி'
ADDED : செப் 15, 2025 09:43 PM

வால்பாறை; கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் சமீப காலமாக யானைகள் கூட்டம், பகல் நேரத்திலேயே வாகனங்களை வழிமறித்து தாக்குகின்றன.
நேற்று காலை, வால்பாறையிலிருந்து சாலக்குடி நோக்கி சென்ற தனியார் பஸ்சை, பட்டப்பாடி பாலம் அருகே காலை, 9:00 மணிக்கு 'கபாலி' என்றழைக்கப்படும் ஒற்றை யானை பஸ்சை வழிமறித்தது.
பஸ்சின் எதிரே, நேருக்கு நேர் நின்றபடி நீண்ட நேரம் நகரமால் நின்றது. நீண்ட நேரத்திற்கு பின் யானை ரோட்டோரத்துக்கு சென்றதும், சுற்றுலா வாகனங்களும், பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
'கபாலி' யானையால் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது. வாகனங்களை வழிமறித்தாலும், சிறிது நேரத்திற்கு பின் வழிவிட்டு, ஒதுங்கி நிற்கும். இது போன்ற சூழ்நிலையில் சுற்றுலா பயணியர் யானைக்கு கோபம் ஏற்படும் வகையில் சப்தம் போடுவது, அருகில் சென்று 'செல்பி' எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளதால், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மெதுவாகவும், கவனமாகவும் இயக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.