/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிரப்பள்ளி ரோட்டில் முகாமிட்ட 'கபாலி' 18 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
அதிரப்பள்ளி ரோட்டில் முகாமிட்ட 'கபாலி' 18 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அதிரப்பள்ளி ரோட்டில் முகாமிட்ட 'கபாலி' 18 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அதிரப்பள்ளி ரோட்டில் முகாமிட்ட 'கபாலி' 18 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 21, 2025 01:26 AM

வால்பாறை: வால்பாறை அருகே, அதிரப்பள்ளி ரோட்டில் நள்ளிரவில், வாகனங்களை வழிமறித்த 'கபாலி' என்ற ஒற்றை யானையால், 18 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில், அதிரப்பள்ளி அருவி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிகளவில் சென்று வருகின்றனர். வால்பாறையிலிருந்து மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில் 'கபாலி' என்றழைக்கப்படும் யானை அடிக்கடி ரோட்டின் குறுக்கே நின்று வாகனங்களை வழிமறித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், 1:30 மணிக்கு அதிரப்பள்ளி அருகே உள்ள அம்பலப்பாறை என்ற இடத்தில் கபாலி யானை நடுரோட்டில் நின்று வாகனங்களை வழிமறித்தது.
அப்போது, வாகனத்தில் இருந்த சுற்றுலா பயணியரை விரட்டியதில் இரண்டு இளைஞர்கள் அலறியடித்து ஓடி அதிர்ஷ்டவசமாக தப்பினர். கேரள அரசு பஸ் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான வாகனங்களை யானை வழிமறித்தது. இரண்டு வாகனங்களை தாக்கியது. மேலும், ரோட்டில் மரத்தை சாய்த்து வழிவிடாமல் நின்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பொதுமக்களுடன் இணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், யானை வனத்துக்குள் செல்லாமல் ரோட்டிலேயே முகாமிட்டதால், சுற்றுலா பயணியர் நடுகாட்டில் பரிதவித்தனர்.
நேற்று காலை, 8:00 மணிக்கு யானை வனப்பகுதிக்குள் சென்றதை தொடர்ந்து, 18 மணி நேரத்திற்கு பின் அதிரப்பள்ளி ரோட்டில் போக்குவரத்து சீரானது.
பொதுமக்கள் கூறுகையில், 'அதிரப்பள்ளி ரோட்டில், 'கபாலி' யானை இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக வாகனங்களை வழிமறித்து தாக்கியுள்ளது. அடிக்கடி வாகனங்களை வழிமறிப்பதால் அரசு பஸ்களில் கூட பயணியர் நிம்மதியாக செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, வனத்துறை அதிகாரிகள் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வேறு பகுதியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'யானையை பிடித்து வேறு பகுதியில் விட உயர் அதிகாரிகளிடம் பேசிய பின் முடிவு செய்யப்படும். இருப்பினும், யானை மீண்டும் வாகனங்களை வழிமறிக்காமல் தடுக்க, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,' என்றனர்.