/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுசிகா நதி சீரமைப்பு பணி 'விறு விறு'
/
கவுசிகா நதி சீரமைப்பு பணி 'விறு விறு'
ADDED : நவ 18, 2025 03:26 AM

கோவில்பாளையம்: --: குப்பை கிடங்காக இருந்த கோவில்பாளையம் பாலத்தின் கீழ்பகுதி தற்போது தூய்மையான குளமாக மாறி உள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே குருடி மலையில் துவங்கி, பெரிய நாயக்கன்பாளையம், அன்னூர், எஸ். எஸ்.குளம், சூலூர் ஒன்றியங்கள் வழியாக கவுசிகா நதி மழைக்காலங்களில் மட்டும் செல்கிறது. ஆண்டு முழுவதும் இந்த நதியில் நீர் செல்ல, நதியை புனரமைக்க, கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பும், கோயம்புத்தூர் மான்செஸ்டர் ரோட்டரி சங்கமும் முயற்சித்து வருகின்றன.
வையம்பாளையத்தில் துவங்கி, கோவில்பாளையம் வழியாக பச்சாபாளையம் வரை 6 கி. மீ., தூரத்திற்கு புனரமைக்கும் பணி மூன்று வாரங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது.
முதல் கட்டமாக கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பாளையத்தில் பெரிய பாலத்தின் கீழ் பகுதி புனரமைப்பு பணி செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் ஐந்து பொக்லைன் இயந்திரங்கள் பணி செய்து வருகின்றன. தனியார் நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் லோடு கணக்கில் குப்பை கொட்டியதால் குப்பை கிடங்காக இருந்த பெரிய பாலத்தின் கீழ்பகுதி தற்போது தூய்மையாக மாறி உள்ளது. குப்பைகள், புதர்கள், சீமை கருவேல மரங்கள், அகற்றப்பட்டு விட்டன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இந்த சமயத்தில் குளத்தில் மழை நீர் செல்வதற்கு வசதியாக குப்பைகள் மற்றும் மண் மேடுகளை அகற்றியது மகிழ்ச்சி தருகிறது.
இதனால் கோவில்பாளையம் குளத்தில் மழை நீர் தேங்கும். சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதைத் தொடர்ந்து பெரிய நாயக்கன் பாளையம் முதல் நொய்யலில் கலக்கும் பகுதி வரை புனரமைக்க வேண்டும்,' என்றனர்.

