/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவில் விழாக்கோலம் காண கண் கோடி... இன்று சொர்க்கவாசல் திறப்பு
/
அரங்கநாதர் கோவில் விழாக்கோலம் காண கண் கோடி... இன்று சொர்க்கவாசல் திறப்பு
அரங்கநாதர் கோவில் விழாக்கோலம் காண கண் கோடி... இன்று சொர்க்கவாசல் திறப்பு
அரங்கநாதர் கோவில் விழாக்கோலம் காண கண் கோடி... இன்று சொர்க்கவாசல் திறப்பு
ADDED : ஜன 10, 2025 12:16 AM

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இன்று வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கஉள்ளது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி வைபவ விழா, விமர்சியாக நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக, திருமொழித் திருநாள் எனும், பகல் பத்து உற்சவம், டிச., 31ம் தேதி துவங்கியது.
கடந்த 10 நாட்களாக கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர், அரங்கநாதர் சுவாமி முன், தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில், குலசேகர பெருமாள் அருளிச் செய்த, பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திரு நெடுந்தாண்டகம் மற்றும் பெரிய திருமொழி பாசுரங்கள் ஆகியவற்றை சேவித்தனர்.
நேற்று இரவு, அரங்கநாத பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் மோகன அவதாரத்தில் எழுந்தருளினார். இன்று அதிகாலை, 5:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற உள்ளது.
தேர் செல்லும் நான்கு வீதிகளில், 34 சமூகத்தின் சார்பில் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சொர்க்கவாசல் வழியாக வெளியே வருவார். ஒவ்வொரு சமூகத்தின் சார்பில் அமைத்துள்ள பந்தல்களில், சுவாமியை வைத்து சிறப்பு பூஜை செய்வர்.
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரங்கநாத பெருமாளை வழிபடுவர். இதை தரிசிக்க கண் கோடி வேண்டும்.
இன்று இரவு, 11:00 மணிக்கு ராப்பத்து உற்சவமான, திருவாய் மொழித் திருநாள் தொடங்க உள்ளது. 17ம் தேதி இரவு திருமங்கை மன்னன் வேடுபரியும், அரங்கநாத பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, உலா வரும் உற்சவமும் நடக்க உள்ளன. 19ம் தேதி இரவு திருவாய் மொழித் திருநாள் சாற்று முறை நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் மற்றும் செயல் அலுவலர் சந்திரமதி செய்து வருகின்றனர்.