ADDED : அக் 20, 2026 04:22 AM
கோவை: பதற்றத்தில் இருக்கும் போது இதயத்தில் படபடப்பு, அதிக வியர்வை, கை நடுக்கம் வருவதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா...இவை ஏன் நடக்கிறது என்பதற்கு உடல்ரீதியான காரணங்கள் இருக்க, உளவியல் காரணங்களும் இருப்பதாக கூறுகிறார், மனநல ஆலோசகர் கவிதா ஜெனார்தனன்.
உளவியல் மற்றும் உடலியல் (சைக்கோசொமாட்டிக்) ஒன்றுடன் ஒன்று இணைந்ததே என்கிறார் இவர்.
‘பதற்றம், மன அழுத்தம், துக்கம் போன்றவை உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் ஏற்கனவே இருக்கும் வலிகளையும் அதிகரிக்கின்றன.
வேகமான இதயத்துடிப்பு, தசை இறுக்கம், வியர்வை, நடுக்கம், எரிச்சல், துாக்கமின்மை ஆகிய அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணலாம்.
இதற்கு என்னென்ன காரணங்கள்?
தொடர்ச்சியான துக்கம், சோர்வு, நம்பிக்கையின்மை, ஆர்வமின்மை, தனிமை, ஆதரவற்ற உணர்வு, வெளிப்படுத்தாத கோபம், விரக்தி, சோகம், அடக்கி வைத்த மனக்கசப்புகள், குடும்ப பொறுப்புகளை தன்மீது சுமத்திக்கொள்ளுதல், அனைவரையும் கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாய உணர்வு, மன அழுத்தம், மாற்றங்களை ஏற்பதில் பயம், பாதுகாப்பற்ற உணர்வு, எதிர்காலம் குறித்த அச்சம், தொடர்ச்சியான கவலை, அதிக சிந்தனை, அதிக எதிர்பார்ப்பு வைத்தல், பிறர் புரிந்து கொள்ளவில்லை என்ற உணர்வு, கவுரவம் குறைந்து விடுமோ என்ற எண்ணம், எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முயற்சித்தல், தோல்வி, இழப்பை தாங்க முடியாமை...இப்படி இவையனைத்துக்கும் மனதுதான் காரணம்.
போனது போகட்டும்; வருவது வரட்டும்!
‘‘வாழ்க்கை வாழ்வதற்கு தானே... ஏன் போனதை நினைத்து வருந்த வேண்டும்...தவறு செய்யாத மனிதரே இல்லை. நம் கையில் இல்லாததை நினைத்து வருந்துவதற்கு பதில் இருக்கும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அணுக வேண்டும். போனது போகட்டும், அடுத்து என்ன செய்யலாம் என்ற எண்ணத்தையும், மன பக்குவத்தையும் வளர்த்துக்கொள்வது நல்லது’’ என்கிறார் கவிதா ஜெனார்தனன்.
