/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் பயணிகளிடம் நகை, பணம் திருடி வீடுகள் கட்டிய 'கில்லாடி' தம்பதியர்
/
பஸ் பயணிகளிடம் நகை, பணம் திருடி வீடுகள் கட்டிய 'கில்லாடி' தம்பதியர்
பஸ் பயணிகளிடம் நகை, பணம் திருடி வீடுகள் கட்டிய 'கில்லாடி' தம்பதியர்
பஸ் பயணிகளிடம் நகை, பணம் திருடி வீடுகள் கட்டிய 'கில்லாடி' தம்பதியர்
ADDED : ஜூலை 29, 2024 03:27 AM

கோவை;தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் பஸ் பயணிகளிடம் நகை, பணம் திருடி வீடுகள் கட்டி சொகுசாக வாழ்ந்த மூன்று தம்பதியரை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் பஸ்களில் பயணிக்கும் பெண்களின் நகை, பணம் திருடுபோவதாக தொடர் புகார்கள் எழுந்தன. மாநகர போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
பெரிய கடை வீதி அருகே பஸ்சில் பயணித்த சரஸ்வதி என்பவர், கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் நகை காணாமல் போனது.
இதேபோல், போத்தனுாரில் ஒரு பெண்ணிடம், ரூ.11 ஆயிரம் திருடுபோனது. குறிப்பாக, பெண்களை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடப்பதால், பெண் ஒருவர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இந்நிலையில், டவுன்ஹாலில் பஸ்சில் நோட்டமிட்டபோது, முத்தப்பன்-சாந்தி தம்பதியர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
அவர்களை தனியாக அழைத்து சென்று, விசாரணை நடத்தியதில் பஸ் பயணிகளிடம் நகை, பணம் திருடுவது தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கடந்த, 23ம் தேதி சுமதி-செல்வக்குமார் தம்பதியரை, கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில், காளீஸ்வரி-கிருஷ்ணன் தம்பதியரையும் தற்போது கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து, 10 சவரன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம், டூ வீலர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில், முத்தப்பன் கொள்ளை கும்பல் தலைவராக செயல்பட்டுள்ளார்.
கொள்ளை பணத்தில் வீடு!
முத்தப்பன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், 'துாத்துக்குடி மாவட்டம், குரங்குமலை அருகே மந்தித்தோப்பு எங்களது சொந்த ஊர். அங்கிருந்து கோவை வந்து, பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தோம். பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள பஸ்களில் நகை, பணம் திருடி வந்தோம்.
நகை திருடியவுடன் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விடுவோம். சந்தேகத்தின்பேரில் எங்களை சோதனையிட்டாலும், மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக, எங்களை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வரும் செல்வக்குமார், கிருஷ்ணனிடம் நகையை கொடுத்து விடுவோம்.
திருட்டு நகைகளை விற்று, கிணத்துக்கடவு பகுதியில் மூன்று வீடுகள் கட்டியுள்ளேன். அதேபோல், இதர இரு தம்பதியினரும் வீடுகள் கட்டியுள்ளனர். இத்தொழிலில் கைதேர்ந்து பழகிவிட்டதால், வேறு தொழில் செய்ய விருப்பமில்லை.
எங்களை போலவே, மேலும் பல தம்பதியர் கோவையில் பயணிகளிடம் நகை, பணம் பறித்து வருகின்றனர். நாங்கள் இங்கு மட்டுமின்றி, கேரளா போன்ற வெளிமாநிலங்களிலும் சென்று நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.