/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கர்ப்பிணிக்கு மூளை ஆபரேஷன் கே.எம்.சி.எச்., சாதனை
/
கர்ப்பிணிக்கு மூளை ஆபரேஷன் கே.எம்.சி.எச்., சாதனை
ADDED : மே 17, 2025 02:26 AM
கோவை : கே.எம்.சி.எச்., மருத்துவமனையில், தீவிர வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட, நான்கு மாத கர்ப்பிணிக்கு, நாட்டில் முதல் முறையாக வலிப்பு நோய் மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டாவது கர்ப்பத்தில், தீவிர வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 31 வயதான இளம்பெண், கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு சோதனைகள் நடந்ததில், மூளையின் வலது பின்பகுதியில் இருந்த, பிறவி கட்டிதான் தொடர் வலிப்புக்கு காரணம் என, துல்லியமாக கண்டறியப்பட்டது.
மருந்துகள் பலனளிக்காததால், தாய், சேய் உயிரை பாதுகாக்க, கர்ப்பகாலத்திலேயே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
பல மணி நேரம் நடைபெற்ற இந்த நுட்பமான அறுவை சிகிச்சையை, நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணர் ராஜேஷ் சங்கர், மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ரோஹித் , மகப்பேறு மருத்துவர் பிரியா பாரி மற்றும் மயக்கவியல், தீவீர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்தனர்.
மருத்துவ குழுவினரை பாராட்டி, கே. எம்.சி.எச்., தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி பேசுகையில், ''உலகளவில் கர்ப்பிணிக்கு மேற்கொள்ளப்பட்ட, இரண்டாவது ஆவணப்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை இதுவாகும். அறுவை சிகிச்சை வாயிலாக, தற்போது அப்பெண்ணுக்கு வலிப்பு ஏற்படுவது முற்றிலும் நின்று ஆரோக்கியமாக உள்ளார்,'' என்றார்.