/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தட்டியெடுத்தது கனமழை இடி இறங்கி மரத்தில் தீ
/
தட்டியெடுத்தது கனமழை இடி இறங்கி மரத்தில் தீ
ADDED : அக் 23, 2024 05:32 AM
தொண்டாமுத்தூர், : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளான ஓணாப்பாளையம், வேடபட்டி, தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, நரசீபுரம், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மாலை முதல் லேசான சாரல் மழை பெய்து வந்தது.
இந்நிலையில், மாலை 6:30 முதல் இரவு, 7:30 மணி வரை, பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, புதுப்பாளையத்தில் உள்ள தனியார் தென்னந்தோப்பில், இடி இறங்கியதில், ஒரு தென்னை மரத்தில் தீப்பிடித்தது.
தொடர்மழையால், தீ அணைந்தது. இரவு, 8:00 மணிக்கு மீண்டும், மழை வெளுத்தெடுத்தது. இதனால் சாலைகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தீபாவளி ஷாப்பிங்
இதே போல், கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும், நேற்று மாலை தொடர்ந்து இரண்டு மணிநேரம் இடியுடன் கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீபாவளி ஷாப்பிங் வந்த பொதுமக்கள், ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். மழை நின்ற பின்னரே, அனைவராலும் வீடுகளுக்கு செல்ல முடிந்தது.
இருளில் மூழ்கிய சுங்கம்
சுங்கம் பகுதியில், காலை 9:00 மணி முதலே மின்சாரம் தடைபட்டது. பழுதை கண்டறிந்து, சரி செய்யும் பணியில் உதவி இயக்குனர் தலைமையில், மின் ஊழியர்கள் துரிதமாக ஈடுபட்டனர். பணி பாதி நடந்து வந்த நிலையில், மாலையில் பெய்த கனமழையால், பணி பாதிக்கப்பட்டது. இரவு வெகுநேரம் ஆகியும் மின்சாரம் வராததால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.