/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
16வ து நிதிக் குழுவிடம் கொடிசியா பரிந்துரை
/
16வ து நிதிக் குழுவிடம் கொடிசியா பரிந்துரை
ADDED : நவ 19, 2024 11:50 PM
சென்னையில், 16வது மத்திய நிதிக்குழு ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகரியா தமிழகத்தின் தேவைகளுக்காக பல்வேறு துறையினரைச் சந்தித்து பரிந்துரைகளைக் கேட்டறிந்தார். கோவை, கொடிசியா சார்பில், அதன் தலைவர் கார்த்திகேயன், 'விஷன் கோயம்புத்தூர் 2027' என்ற தலைப்பில் பரிந்துரைகளை அளித்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தின் 2வது பெரிய நகரமான கோவை, 4.5 லட்சத்துக்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுடன், உற்பத்தித் துறையில் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. ஏராளமான பெரு நிறுவனங்களும், ஐ.டி., நிறுவனங்களும் கோவையில் கால்பதிக்க விரும்புகின்றன.
உள்கட்டமைப்பு
தொழில் நகரமான இங்கு, போக்குவரத்துக் கட்டமைப்புகளை மேம்படுத்தி, நவீனப்படுத்த வேண்டும்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ ரயில் சேவை தேவை. கோவையில் விமான நிலைய விரிவாக்கம், தனி சரக்கு முனைய பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
கிழக்கு மற்றும் மேற்கு புறவழிச்சாலைப் பணிகள் முடிக்கப்படுவதுடன், எல் அண்டு டி பை பால் அகலப்படுத்த வேண்டும். கோவையில் இருந்து சென்னை மற்றும் தூத்துக்குடிக்கு ஆறு வழிச்சாலை விரைவாக அமைக்கப்பட வேண்டும்.
தொழிற்பூங்கா
கோவையில் நிலத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. நிறுவனங்கள் நிலம் வாங்குவது சிரமமாக உள்ளது. எனவே, அரசு, நிலத்தை கையகப்படுத்தி, வெவ்வேறு இடங்களில் தலா 300 மற்றும் 400 ஏக்கர் பரப்பில் தொழிற்பூங்காக்களை, போதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்தித் தர வேண்டும்.
கொரியா நிறுவனங்கள், கோவையில் கால்பதிக்க விரும்புகின்றன. கோவையின் உற்பத்தித் திறனை அந்நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதால், ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வர வாய்ப்புள்ளது.
இது,கோவையில் தண்ணீருக்கான எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு, மழை நீர் சேகரிப்பை கட்டாயமாக்குதல், நீர் நிலைகளை சுத்திகரித்தல் போன்றவை அவசியம்.
மேற்கூரை சோலார்
நகரமயமாதலின் காரணமாக, கோவையின் மின்தேவை ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரிக்கிறது. எனவே, 112 கிலோவாட்டுக்குக் கீழ் மின்சாரத்தைப் பயன்படுத்தும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு, மேற்கூரை சோலார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது, பசுமை எரிசக்தியை ஊக்குவிப்பதுடன், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் மின்கட்டணத்தையும் குறைக்கும்.
ஏற்றுமதி
கோவை நிறுவனங்கள், சர்வதேச ஏற்றுமதிக் கண்காட்சிகளில் பங்கேற்க, நிதியுதவி அளிக்க வேண்டும். இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகம் விரிவடைவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
திறன்மேம்பாட்டு பல்கலை
கோவையில் சுமார் 100 கல்லூரிகள் உள்ளன. இங்கு, திறன் மேம்பாட்டு பல்கலை அமைப்பது, தொழிற்சாலைகளுக்குத் தேவையான திறனைப் பெற கல்லூரி மாணவர்களுக்கு உதவுவதாக இருக்கும். புலம்பெயர் தொழிலாளர்களை நம்பியிருக்கும் நிலையையும் இது மாற்றும்.
ஆய்வக வசதிகள்
எலெக்ட்ரிக் வாகன உதிரிபாகங்கள், பாதுகாப்பு தளவாட உபகரணங்களின் உற்பத்திக் கேந்திரமாக கோவை வளர்ந்து வருகிறது. இவற்றுக்கான ஆய்வக வசதி மற்றும் சான்றளிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவது அவசியம்.
மேற்கண்ட உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டால், மாநில ஜி.டி.பி.,யில் கோவை குறைந்தது 10 சதவீத பங்களிப்பையும், ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டவும் பெரும் பங்களிப்பை நிச்சயம் தரும்.
இவ்வாறு, பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.