/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிமங்கலம் போலீஸ் எல்லையை பிரித்து புறக்காவல் நிலையம்! பெதப்பம்பட்டியில் அமைக்க எதிர்பார்ப்பு
/
குடிமங்கலம் போலீஸ் எல்லையை பிரித்து புறக்காவல் நிலையம்! பெதப்பம்பட்டியில் அமைக்க எதிர்பார்ப்பு
குடிமங்கலம் போலீஸ் எல்லையை பிரித்து புறக்காவல் நிலையம்! பெதப்பம்பட்டியில் அமைக்க எதிர்பார்ப்பு
குடிமங்கலம் போலீஸ் எல்லையை பிரித்து புறக்காவல் நிலையம்! பெதப்பம்பட்டியில் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 21, 2025 08:26 PM

குடிமங்கலம்; குற்றத்தடுப்பு பணிகள் மேம்பட, அதிக பரப்பளவு உள்ள குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டு எல்லையை இரண்டாக பிரித்து, பெதப்பம்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு, போலீசாரும், பொதுமக்களும் பாதித்து வருகின்றனர்.
உடுமலை போலீஸ் உட்கோட்டத்துக்குட்பட்டது குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன். முன்பு இந்த ஸ்டேஷன் கட்டுப்பாட்டில், 18 ஊராட்சிக்குட்பட்ட, 40 கிராமங்கள் இருந்தன.
திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, போலீஸ் ஸ்டேஷன் எல்லையும் சீரமைக்கப்பட்டது. அப்போது, கோவை மாவட்டம், நெகமம், கோமங்கலம் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில், இருந்த 30 கிராமங்கள், குடிமங்கலம் ஸ்டேஷனுடன் சேர்க்கப்பட்டது. இதனால், கட்டுப்பாட்டு பகுதி, 83 கிராமங்களாக அதிகரித்தது.
பொள்ளாச்சி, பல்லடம், மடத்துக்குளம், தாராபுரம் தாலுகா எல்லைகளை ஓட்டி, பரந்து விரிந்த பரப்பில், குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டு கிராமங்கள் அமைந்துள்ளன.
பணிகள் பாதிப்பு ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ., 30 போலீசார் பணியிடங்கள் இந்த ஸ்டேஷனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிக பரப்பளவில் கிராமங்கள் அமைந்துள்ளதால், போலீசார் பற்றாக்குறை நிலவுகிறது. ரோந்து உள்ளிட்ட குற்றத்தடுப்பு பணிகள் பாதிக்கிறது.
சில நேரங்களில், குற்ற சம்பவங்களின் போது சம்பவ இடத்துக்கு செல்ல போதிய போலீசார் இல்லாமல், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. விபத்து மற்றும் இதர குற்றச்சம்பவங்களின் போது, குறித்த நேரத்துக்குள், போலீசார் சம்பவ இடத்துக்கு செல்வதில்லை.
இதனால், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது. வழக்குகளில் குற்றவாளிகளை குறித்த நேரத்தில் கைது செய்வதில், பின்னடைவு ஏற்படுகிறது. சிறு திருட்டுகளில் கூட குற்றவாளிகளை கைது செய்வதில்லை.
சமீபகாலமாக கிராமங்களில், டிரான்ஸ்பார்மர் உபகரணங்கள் முதல் கொப்பரை தேங்காய் வரை திருடுபோய் விவசாயிகளும் மக்களும் அச்சத்தில் உள்ளனர். இந்த புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
சமீபத்தில் விசாரணைக்கு சென்ற சிறப்பு எஸ்.ஐ., வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், குடிமங்கலம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வாறு, நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்னைகளுக்கும், மக்கள் அச்சத்துக்கும்முற்றுப்புள்ளி வைக்க, குடிமங்கலம் ஸ்டேஷன் எல்லையை இரண்டாக பிரித்து, பெதப்பம்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் பெதப்பம்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க தற்காலிகமாக இடத்தேர்வும் செய்யப்பட்டது. அதன்பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குற்றத்தடுப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக, குடிமங்கலம் ஸ்டேஷன் எல்லையை பிரித்து, பெதப்பம்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்; மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசார் நியமித்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பி வருகின்றனர்.

