/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவு; பொரி மூட்டைகள் தேக்கம்
/
மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவு; பொரி மூட்டைகள் தேக்கம்
மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவு; பொரி மூட்டைகள் தேக்கம்
மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவு; பொரி மூட்டைகள் தேக்கம்
ADDED : அக் 04, 2024 10:17 PM

மேட்டுப்பாளையம் : ஆயுத பூஜையை முன்னிட்டு, பொரி உற்பத்தி ஜரூராக நடைபெறுகிறது. ஆனால் பொரியை வாங்குவோர் குறைந்ததால், பொரி மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன என, உற்பத்தியாளர் தெரிவித்தார்.
காரமடையில் பொரி உற்பத்தி செய்யும், குடிசை தொழில்கள் அதிக அளவில் இருந்தன. இந்த பொரியை கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு, மூட்டை, மூட்டைகளாக அனுப்பி வந்தனர். மக்கள் பொரியை உணவு பொருளாக ஏற்றதால், விரும்பி வாங்கி சாப்பிட்டு வந்தனர். தினமும் பொரி உற்பத்தியில், நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வந்தனர்.
தினமும் உற்பத்தி செய்யப்படும் பொரிகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, வாரச் சந்தைகளிலும், திருவிழாக்களிலும் விற்பனை செய்து வந்தனர். தற்போது மக்களின் மோகம், நவீன உணவின் மீது சென்றதால், பொரியின் மீது ஆர்வம் குறைந்துள்ளது.
காரமடையை அடுத்த சின்னக்காரனூரில் பொரி உற்பத்தி செய்யும் லீலாவதி கூறியதாவது: காரமடையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, பொரி உற்பத்தி செய்யும், சிறியதும், பெரியதுமாக, 20க்கும் மேற்பட்ட அடுப்புகள் இருந்தன. தற்போது இரண்டு, மூன்று அடுப்புகள் மட்டுமே உள்ளன.
பொரி உற்பத்திக்கு தேவையான ஐ.ஆர்.36 என்ற ரக நெல்லை, கர்நாடகாவில் விவசாயிகள் பயிர் செய்து வந்தனர். தற்போது இந்த விவசாயிகள், நெல் விவசாயத்தை குறைத்து, பூ மற்றும் காய்கறிகள் விவசாயத்திற்கு மாறிவிட்டனர். அதனால் இந்த நெல்லுக்கு, பற்றாக்குறை ஏற்பட்டதால், கொல்கத்தாவில் இருந்து, பொரி அரிசியாக வாங்கி வருகிறோம்.
அரிசியை முதலில், உப்பு கலந்த தண்ணிரில் ஊற வைத்து, பதமான அளவில் காய வைத்து, மூட்டைகளில் பிடித்து வைத்து விடுவோம். பொரி உற்பத்தி செய்யும் போது, அரிசியை பதமாக வறுக்க வேண்டும். நன்கு உலர்ந்த பின், கடல் மணலில் பொரி வறுக்கப்படும்.
கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு மில் மற்றும் கம்பெனி உரிமையாளர்கள், 100 மூட்டைகளுக்கும் மேல் வாங்குவர். ஆயுத பூஜை நாளில், வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்குவர். தற்போது பெயரளவிற்கு ஐந்து மூட்டைகள் வாங்குகின்றனர். ஆயுத பூஜைக்காக பொரி உற்பத்தி செய்ய, அதிக அளவில் அரிசி வாங்கப்பட்டது. அரிசியை பொரியாக உற்பத்தி செய்து, மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் மத்தியிலும் பொரி வாங்கும் ஆர்வம் குறைந்ததால், விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளன. இந்த தொழிலை நம்பி, பல குடும்பத்தினர் உள்ளனர்.
அதிகளவில் பொரிகள் வாங்கி சாப்பிட்டால் தான், இந்த குடும்பத்தினருக்கு வாழ்வு கிடைக்கும்.
இவ்வாறு உற்பத்தியாளர் கூறினார்.