ADDED : ஆக 19, 2026 09:00 PM
கோவை: சென்னையை சேர்ந்தவர் சரவணன் கருப்பசாமி,50; சுப்ரீம் கோர்ட் வக்கீல். அகில உலக மனித உரிமை ஆணையத்தின், இந்திய பிரதிநிதி எனக்கூறி, பல நபர்களிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக சேர்ப்பதாக கூறி, சென்னை மற்றும் கோவையில் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்தார். புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரித்து, 2008ல் சரவணன் கருப்பசாமி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இவர் மீது கோவை சி.ஜே.எம்., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடந்து வந்தது. ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகவில்லை.
வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதும் ஆஜராகவில்லை. ஜாமினில் வெளியே வரமுடியாத ‘பிடிவாரன்ட்’ பிறப்பித்து நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார். செப்., 9க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
