/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளியில் இருந்து கூடுதல் வருமானம்; சம்பாதிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
/
தக்காளியில் இருந்து கூடுதல் வருமானம்; சம்பாதிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
தக்காளியில் இருந்து கூடுதல் வருமானம்; சம்பாதிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
தக்காளியில் இருந்து கூடுதல் வருமானம்; சம்பாதிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
ADDED : ஜூலை 25, 2025 09:22 PM

கோவை; தக்காளியை வீணாக்காமல், போதிய வருமானம் ஈட்டும் வழிமுறைகள் இருப்பதால், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, வழிகாட்டப்பட்டுள்ளது.
கோவையில், வழுக்குபாறை, வேலந்தாவளம், திருமலையம்பாளையம், கண்ணமநாயக்கனூர், பிச்சனுார் உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில், அதிகளவு தக்காளி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள நாச்சிபாளையம் மார்க்கெட்டில், ஏலம் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன.
தவிர, தக்காளி வரத்து அதிகரிக்கும் நிலையில், போதிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் தக்காளியை வீணாக்காமல் தடுக்க, மதிப்பு கூட்டு பொருள் தயாரித்து, வருமானம் ஈட்டலாம் என, விவசாயிகளுக்கு வழிமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக, திருப்பூர், வேளாண் அறிவியல் நிலைய உணவியல் உதவி பேராசிரியர் கவிதாஸ்ரீ கூறியதாவது:
தக்காளியை மதிப்பு கூட்டு பொருளாக தயாரிக்கும் நடவடிக்கையில், முதற்கட்டமாக, தக்காளியைஉலர்த்தும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு, சோலார் சூரிய ஒளி உலர்த்துதல் முறையில் தக்காளியை உலர்த்தலாம்.
சிறிய அளவாக இருந்தால், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை, சற்று அதிகளவில் உலர்த்த வேண்டும் என்றால், அதற்கேற்ப, மானிய விலையில் இயந்திரங்கள் கிடைக்கின்றன. இதற்கு, வேளாண் பொறியியல் துறையில் விண்ணப்பிக்கலாம். இதன் வாயிலாக, தக்காளியை வீணாகாமல் தடுக்கலாம்.
இதற்கு முன்னதாக, 'பிளான்சிங்' என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. இரண்டு வினாடி முதல் 5 நிமிடங்கள் வரை, 80 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைக்கும் போது, தக்காளியில் உள்ள என்சைம்களின் பயன்பாட்டை குறைக்க முடியும்.
இதன் வாயிலாக, தக்காளியின் வாழ்நாளை அதிகரிக்க முடியும். உலர்த்தப்பட்ட தக்காளியில் பொடி தயாரிக்கலாம்.
இதற்கு அடுத்தபடியாக, 'கேபினட் ட்ரே ட்ரையர்' என்ற முறையிலும் தக்காளியை உலர்த்தலாம். தக்காளியில் சாறு, கூழ், பேஸ்ட் ஆகவும், மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றலாம்.
'ரிடார்ட்' என்ற முறையில் தக்காளியை பதப்படுத்தி, ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடங்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் வழிமுறையும் உள்ளது.அறுவடை பின் சார் தொழில்நுட்ப பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற பயிற்சிகளையும், வழிமுறைகளையும், விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டால், தக்காளியில் நஷ்டம் என்பது இருக்காது.
இவ்வாறு, அவர் கூறினார்.