UPDATED : ஜூன் 18, 2026 04:58 PM
ADDED : ஜூன் 18, 2026 04:50 PM

வால்பாறை: வால்பாறை அண்ணாநகரில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டும் வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் சிறுத்தைகள் அதிகளவில் உள்ளன. தற்போது, மக்கள் நெருக்கம் மிகுந்த நகரிலும் சிறுத்தை வரத்துவங்கியுள்ளது. அண்ணாநகர் ராமர்கோவில் குடியிருப்பு பகுதியில் நேற்று முன் தினம் இரவு, சிறுத்தை நடந்து செல்வது, அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது.
சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி உலா வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'அண்ணாநகரில், சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சிறுத்தைக்கு பிடித்தமான நாய், கோழி, ஆடு போன்றவைகளை வீட்டில் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.
