ADDED : பிப் 05, 2025 11:37 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள உள்ள சிறுமுகையில் போக்கு காட்டி வரும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் சாலையில், கருப்பராயன் கோவில் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.
அதே போல், சில மாதங்களுக்கு முன் வெள்ளிப்பாளையம் பகுதி சென்னாமலை கரடு என்ற இடத்தில் கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது. பின், மோத்தேபாளையத்தில் மாடு ஒன்றை அடித்து கொல்ல பார்த்தது.
இதையடுத்து அண்மையில் மோத்தேபாளையத்தில், சிறுமுகை வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் சிறுத்தை கூண்டிற்குள் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
இதுகுறித்து, சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தையின் நடமாட்டம் தொடர்பாக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. கூண்டும் வைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை தினமும் கண்காணித்து, சிறுத்தையை விரைந்து பிடித்துவிடுவோம், என்றனர்.