இயல்பை விட குறைந்த மழை: விதை, உரம் இருப்பு திருப்தி
இயல்பை விட குறைந்த மழை: விதை, உரம் இருப்பு திருப்தி
UPDATED : நவ 27, 2026 07:22 PM
ADDED : நவ 27, 2026 07:22 PM
உடுமலை: மாவட்டத்தில் நடப்பாண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், சராசரியை விட, 143.89 மி.மீ., மழை குறைந்துள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், நடப்பாண்டு குளிர் கால மழை, கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவ மழைகள் ஏமாற்றின.
ஆண்டு மழை பொழிவில், அதிக பங்களிப்பு உள்ள வட கிழக்கு பருவ மழையும் குறைந்துள்ளதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின், ஆண்டு சராசரி மழை பொழிவு, 660.64 மி.மீ., ஆகும். இதில், நவம்பர் மாதம் வரை சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவு, 534.07 மி.மீ., மழை.
ஆனால், நடப்பாண்டு, பருவ மழைகள் குறைந்து, தற்போது வரை, 390.18 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. நடப்பாண்டு, கடந்த, 11 மாதங்களில் பெய்ய வேண்டிய சராசரி மழையை விட, 143.89 மி.மீ., குறைவாக பெய்துள்ளது. வட கிழக்கு பருவ மழையும், இயல்பை விட குறைந்துள்ளது.
இடுபொருட்கள் இருப்பு
மாவட்டத்தில், பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளதாக, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, வேளாண்மை கிடங்குகளில், நெல் விதை, 7.41 டன், தானிய பயிறுகள், 44.08 டன், பயிறு வகை பயிறுகள், 18.60 டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள், 3.50 டன் இருப்பு உள்ளது.
அதே போல், பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும் தேவையான அளவு இருப்பு உள்ளது.
அதன் படி, யூரியா, 2,831 டன், டி.ஏ.பி., 1,877 டன், காம்ப்ளக்ஸ், 5,166 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட், 664 டன் அளவு இருப்பு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
