தென்னை சாகுபடி குறித்து துல்லியமான கணக்கெடுப்பு நடத்தணும்!மத்திய அரசின் மானியத்துக்கு கைகொடுக்கும்
தென்னை சாகுபடி குறித்து துல்லியமான கணக்கெடுப்பு நடத்தணும்!மத்திய அரசின் மானியத்துக்கு கைகொடுக்கும்
UPDATED : ஆக 18, 2026 07:14 PM
ADDED : ஆக 18, 2026 05:22 PM
பொள்ளாச்சி: 'மத்திய அரசின் மானியம், சலுகைகளை பெற தென்னை சாகுபடி பரப்பளவை துல்லியமாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்,' என, தென்னை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், விளைவிக்கப்படும் தேங்காய், உற்பத்தி செய்யப்படும் கொப்பரை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தென்னை வேர்வாடல் நோய், வெள்ளை ஈ நோய் தாக்குதல் பிரச்னைகளால், தென்னை விவசாயம் முக்கியமானதாக உள்ளது. கடந்த சில மாதங்களாக வரத்து குறைவால், தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் கொப்பரைக்கு அரசு நிர்ணயிக்கும் ஆதார விலைக்காக, புள்ளி விபரங்கள் முறையாக கொடுப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சங்கத்தின் மாநில தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:
தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நீண்ட கால கோரிக்கையான தமிழக அரசு சார்பில் பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும்.
கொப்பரை கொள்முதல் விலை, தற்போது குறைந்தபட்ச ஆதார விலை, 120 ரூபாயாக மத்திய அரசு வழங்குகிறது. இது விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் கட்டுப்படியாகாது. எனவே, கிலோவுக்கு, 200 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்.
தென்னை விவசாயம், தேங்காய் உற்பத்தியில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் இருந்து அதிகளவு தேங்காய் வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஆனால், அதற்கான தரவுகளும், புள்ளி விபரங்களும் இல்லாததால் மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய மானியம், சலுகைகள் முறையாக கிடைப்பதில்லை.
தமிழக அரசு, வருவாய்துறை வாயிலாக கணக்கெடுப்பு நடத்தி தென்னை சாகுபடி பரப்பளவை துல்லியமாக அறிவித்து, அந்த புள்ளி விபரங்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். கணக்கெடுப்பு செய்து முறையாக விபரங்களை தெரிவித்தால் விவசாயிகளுக்கு மானிய திட்டங்கள், சலுகைககள் முறையாக கிடைக்கும். ஆதார விலை நிர்ணயிக்கவும் கைகொடுக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
