/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடை மேம்பாலத்துக்கு பதிலாக எஸ்கலேட்டரில் 'பறக்கலாம்!' அவிநாசி சாலையில் அமைகிறது!
/
நடை மேம்பாலத்துக்கு பதிலாக எஸ்கலேட்டரில் 'பறக்கலாம்!' அவிநாசி சாலையில் அமைகிறது!
நடை மேம்பாலத்துக்கு பதிலாக எஸ்கலேட்டரில் 'பறக்கலாம்!' அவிநாசி சாலையில் அமைகிறது!
நடை மேம்பாலத்துக்கு பதிலாக எஸ்கலேட்டரில் 'பறக்கலாம்!' அவிநாசி சாலையில் அமைகிறது!
UPDATED : மார் 06, 2024 02:17 AM
ADDED : மார் 06, 2024 01:37 AM

கோவை:கோவை - அவிநாசி ரோட்டில், சுரங்க நடைபாதை அமைப்பதற்கு பதிலாக, 'எஸ்கலேட்டர்' வசதியுடன் நடை மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எவ்வளவு செலவாகும் என மதிப்பீடு தயாரிக்க, நெடுஞ்சாலைத்துறைக்கு, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. இதுவரை, 65 சதவீத பணிகள் முடிந்திருக்கின்றன. வரும் டிச., மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில், ஐந்து இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், மின் புதை வடம், நிலம் கையகப்படுத்த செலவு உள்ளிட்ட காரணங்களை காட்டியும், மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்க, திட்ட அறிக்கையில் கூறியிருப்பதாலும், மாநில நெடுஞ்சாலைத்துறையால் அப்பணி மேற்கொள்வதை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
சுரங்க நடைபாதை அமைப்பதற்கு வாய்ப்பு குறைவு என, நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகின்றனர். குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாற்ற வேண்டும்; கால தாமதம் ஏற்படும்; மக்களுக்கும் அவதி ஏற்படும்.
'எஸ்கலேட்டர்' வசதியுடன் நடைமேம்பாலம் அமைப்பதே, சரியானதாக இருக்கும் என ஆலோசனை கூறினர். இதற்கு எவ்வளவு செலாவாகும் என மதிப்பீடு கேட்டிருக்கிறோம். ஐந்து இடங்களில் நடைமேம்பாலம் கட்டுவதற்கு ஏற்கனவே, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
'எஸ்கலேட்டர்' இல்லாமல் நடைமேம்பாலம் அமைத்தால், யாரும் பயன்படுத்த மாட்டார்கள்; பயனில்லாமல் போய் விடும். அதனால், எஸ்கலேட்டர் வசதியுடன் நடைமேம்பாலம் அமைக்க எவ்வளவு செலவாகுமென மதிப்பீடு தயாரித்து விட்டு, எங்கெங்கு அமைக்கலாம் என முடிவெடுக்கப்படும்.
சுரங்க நடைபாதை அமைப்பதற்கு வாய்ப்பு குறைவு; மீண்டும் ஆய்வு செய்யச் சொல்லி இருக்கிறோம். காலதாமதம் ஏற்படும்; கூடுதல் செலவு ஏற்படும். ஏற்கனவே பதித்த பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், மின்புதை வடம் உள்ளிட்டவற்றை இடம் மாற்ற வேண்டும். அதனால், வாய்ப்பில்லை என்கின்றனர்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

