/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் வளம் காத்து வாழ்வில் வளம் பெறுவோம்! இன்று உலக மண் தினம்
/
மண் வளம் காத்து வாழ்வில் வளம் பெறுவோம்! இன்று உலக மண் தினம்
மண் வளம் காத்து வாழ்வில் வளம் பெறுவோம்! இன்று உலக மண் தினம்
மண் வளம் காத்து வாழ்வில் வளம் பெறுவோம்! இன்று உலக மண் தினம்
ADDED : டிச 05, 2025 06:52 AM
பொள்ளாச்சி: உலக மண் தினம் இன்று கொண்டாடப்படும் சூழலில், மண் வளம் காத்து வாழ்வில் வளம் பெறுவோம் என அனைவரும் உறுதியேற்போம்.
மண்வள பாதுகாப்பையும், மண் ஆதாரங்களையும் முறையாக பேணி பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும், சர்வேதச மண் தினமானது ஒவ்வொரு ஆண்டும், டிச.,5ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மண் அறிவியல் கூட்டமைப்பானது மண் தினத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. கடந்த, 68வது ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. 2014ம் ஆண்டு முதல் சர்வதேச மண் தினம் கொண்டாடப்படுகிறது.
தாய்லாந்து நாட்டு முன்னாள் அதிபர் பூமிபால் தஜேவின் பிறந்த நாளான டிச.,5ம் தேதி சர்வதேச மண் தினமாக போற்றப்படுகிறது. நடப்பாண்டு சர்வதேச மண் தினம், 'ஆரோக்கியமான நகரங்களுக்கு ஆரோக்கியமான மண்' என்ற மையக் கருத்துடன் கொண்டாடப்படுகிறது.
இது குறித்து ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி கூறியதாவது:
மண் என்பது வெறும் பயிர் வளர்க்கும் ஊடகம் மட்டுமல்ல. இது ஒரு உயிரோட்டம் உள்ள பெட்டகமாகும். பல கோடி நுண்ணுயிர்களும், பேரினங்களும் உள்ள ஒரு கூடமாக மண் திகழ்கிறது. இவ்வாறு சிறப்பு பெற்ற மண் வளத்தை பாதுகாக்க மண்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு சர்வதேச மண் தினம், 'ஆரோக்கியமான நகரங்களுக்கு ஆரோக்கியமான மண்' என்ற மையக் கருத்துடன் கொண்டாடப்படுகிறது.பொதுவான நகர வளர்ச்சி என்றால், உயரமான கட்டடம், சாலைகள், போக்குவரத்து, தொழில்துறை வளர்ச்சி என பார்க்கிறோம். அதே அளவுக்கு மண் வளமும் முக்கியமானதாகும்.
நகரத்தின் நீடித்த முன்னேற்றம், மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் சமநிலைக்கு மண் உதவுகிறது. பூங்காக்கள், பசுமை, நகர காடுகள், சாலையோர மரங்கள் என அனைத்தும் மண் சார்ந்து தான் உள்ளன.
மண் வளம் பாதிக்கப்பட்டால், காற்றின் தரம், குடிநீரின் தரம் பாதிக்கப்படும். நகரங்களில் குப்பை குவியில், தொழிற்சாலை கழிவு, கட்டட கழிவுகள் மண்ணில் கொட்டப்படுகின்றன. அவை அதிகளவு சேரும் போது மண் நச்சுத்தன்மை அதிகரித்து பசுமை குறையும், வெப்ப நிலை அதிகரிக்கும், ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
நகரத்தில் மண் வளம் இருந்தால் சமநிலை வாயு, நல்ல ஆக்சிஜன், துாய்மையான காற்று, வெப்பநிலை கட்டுப்பாடு சாத்தியமாகும்.வீட்டு தோட்டம் போன்றவைக்கு ஆரோக்கியமான மண் வளம் அவசியம். மாசுகளை ஈர்த்து, ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். நிலத்தடி நீர் மாசுபடுவது குறையும்.
நகரத்தில் மண் ஆரோக்கியமாக இருக்க, கழிவு மேலாண்மை முறையாக பின்பற்ற வேண்டும். குப்பை உள்ளிட்ட கழிவுகள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும்.
தொழிற்சாலை கழிவுகளை மண்ணில் கொட்டாமல், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அகற்ற வேண்டும். பசுமையை முழுமைப்படுத்த மரக்கன்றுகள் நடலாம். மழைநீர் சேகரிக்கலாம்.மண் பசுமையை பாதுகாக்கும். ஒவ்வொரு வீட்டிலும் உணவு கழிவுகள் வெளியே கொட்டி விடுவதால் மாசு ஏற்படும். அவற்றை தொழில்நுட்பங்களை பின்பற்றி மக்க வைத்து இயற்கை உரமாக மாற்றி வீட்டு தோட்டங்களில் பயன்படுத்தலாம்.
சமூக அமைப்புகள், பள்ளி, கல்லுாரிகளில் மண்ணின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மண் காலடியில் கிடக்கும் அமைதியான செல்வம். நகர வாசிகள், கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் வாயிலாக மண் வளத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

