/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடைப்புள்ள மழைநீர் வடிகாலை துார்வாரி வருமுன் தடுப்போம்! மழை தீவிரத்துக்கு முன் தேவை நடவடிக்கை
/
அடைப்புள்ள மழைநீர் வடிகாலை துார்வாரி வருமுன் தடுப்போம்! மழை தீவிரத்துக்கு முன் தேவை நடவடிக்கை
அடைப்புள்ள மழைநீர் வடிகாலை துார்வாரி வருமுன் தடுப்போம்! மழை தீவிரத்துக்கு முன் தேவை நடவடிக்கை
அடைப்புள்ள மழைநீர் வடிகாலை துார்வாரி வருமுன் தடுப்போம்! மழை தீவிரத்துக்கு முன் தேவை நடவடிக்கை
ADDED : அக் 30, 2025 11:42 PM

கோவை: பருவமழை தீவிரமடையும் முன் பழைய மழைநீர் வடிகால்களை துார்வாருவதுடன், தாழ்வான பகுதிகளில் இருக்கும் வடிகால்களில் தண்ணீர் தேங்காது நிரந்தர தீர்வுகாணுமாறு வார்டு சிறப்பு கூட்டத்தில் மனுக்கள் குவிகின்றன.
வடகிழக்கு மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் கோவையில் பெரியளவில் மழை இல்லை.
சிறிது நேரம் மழை பெய்தாலே மழைநீர் பெருக்கெடுத்து தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்துவது இங்கு தொடர்கதையாக உள்ளது. அவிநாசி ரோடு மேம்பாலம், கிக்கானி ரயில்வே பாலம் உள்ளிட்ட இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்குகிறது.
இதுபோன்ற இடங்களில் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போதியளவில் மழைநீர் வடிகால் வசதி இல்லாமையே இதற்கு முக்கிய காரணம். இதையடுத்து, மழைநீர் வடிகால் கட்ட வேண்டிய இடங்கள் குறித்து பொறியியல் பிரிவு வாயிலாக விரிவான திட்ட அறிக்கையை மாநகராட்சி தயாரித்துள்ளது.
அவசர தேவையுள்ள இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் தற்போது நடந்துவருகிறது. மாநகராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக, 116.29 கி.மீ.,க்கு மழைநீர் வடிகால் கட்டுவதற்கு ரூ.274 கோடி அரசிடம் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை உள்ளிட்டவற்றால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நடந்துவரும் வார்டு சிறப்பு கூட்டங்களில் மழைநீர் வடிகால் தேவை, துார்வாருதல் தொடர்பாகவே நிறைய மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
பட்டியல் சமர்ப்பிப்பு!
கவுன்சிலர்கள் கூறுகையில்,'வார்டு சிறப்பு கூட்டத்தில் மழைநீர் வடிகால் அடைப்பை சரி செய்தல், புதிதாக கட்டித்தருதல் தொடர்பான மனுக்களே அதிகம் வந்துள்ளன. மழை பெய்துவருவதால் தற்போது இதுதான் முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே, துார்வார வேண்டிய இடங்கள், கட்ட வேண்டிய இடங்கள் குறித்த பட்டியலை மாநகராட்சி பொறியியல் பிரிவிடம் சமர்ப்பித்துள்ளோம். பருவமழை தீவிரம் அடையும் முன் மாநகராட்சி முழுவதும் மழைநீர் வடிகால் மட்டுமின்றி, நீர் வழித்தடங்களையும் போர்க்கால அடிப்படையில் துார் வார வேண்டும்' என்றனர்.
விரைந்து துவங்க!
மாநகராட்சி பகுதிகளில் நிலத்தடி நீரை சேமிக்கும் விதமாக, 100 இடங்களில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இப் பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

