/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆவணங்கள் இன்றி விதை விற்பனை செய்தால் உரிமம் ரத்து! விவசாயிகள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்
/
ஆவணங்கள் இன்றி விதை விற்பனை செய்தால் உரிமம் ரத்து! விவசாயிகள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்
ஆவணங்கள் இன்றி விதை விற்பனை செய்தால் உரிமம் ரத்து! விவசாயிகள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்
ஆவணங்கள் இன்றி விதை விற்பனை செய்தால் உரிமம் ரத்து! விவசாயிகள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்
ADDED : நவ 05, 2025 12:09 AM

மேட்டுப்பாளையம்: தனியார் விதை விற்பனை நிலையங்களில், ஆவணங்கள் இன்றி விதை விற்பனையில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்படும் என விதை ஆய்வு இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் விவசாயிகள் ஆன்லைனில் விதை வாங்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் விதை விற்பனை நிலையங்களில், விதைகள் விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோன்ற நிறுவனங்களில் சிலர் போலி விதைகள், ஆவணங்கள் இன்றி விதைகள் விற்பனை, தரம் இல்லாத விதைகள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத் துறையின் விதை ஆய்வு இணை இயக்குநர் ஸ்ரீவித்யா, கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, விதை விற்பனை செய்வதற்கு தேவையான பதிவுச் சான்று, முளைப்புச்சான்று அறிக்கை, கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் பெற்று விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா என விசாரணை மேற்கொண்டார்.
மேலும், விதைகள் சேமிப்பு கிடங்குகளில் ஆய்வு செய்த போது விதைகள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அருகாமையில் வைக்கப்படாமல், தனி யாக சேமித்து விற்பனை செய்திட அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, விதை விற்பனைக்குத் தேவையான ஆவணங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட ரூ.51,780 மதிப்புள்ள 149 கிலோ விதைகள் விற்பனை செய்திட தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத் துறையின் விதை ஆய்வு இணை இயக்குநர் ஸ்ரீவித்யா கூறியதாவது:
'அனைத்து விதை விற்பனையாளர்களும், உரிய விதை உரிமம் பெற்று விதை சட்ட விதிகளை முழுமையாக கடைபிடித்து, தரமான விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்திட வேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்காத விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம், விதைக்கட்டுப்பாட்டு ஆணை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம், ஆகியவற்றின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆவணங்கள் இன்றி விதை விற்பனையில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்படும். விதைகளை விவசாயிகளுக்கு அதிகபட்ச விற்பனை விலைக்கு மிகாமல் விற்பனை செய்திட வேண்டும்.
மேலும், தற்போதைய ரபி பருவத்திற்கு ஏற்ற விதை ரகங்களை மட்டுமே விற்பனை செய்திட அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகள் ஆன்லைனில் விதைகளை வாங்கி ஏமாறக்கூடாது, என்றார்.
இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் ரேவதி, விதை ஆய்வாளர், (தொழில்நுட்பம்) சென்னை செல்வக்குமார் மற்றும் கோவை மாவட்ட விதை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.----

