/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயிரற்று கிடக்கும் வேலைவாய்ப்பு அரசாணை; வேதனையுடன் 15 லட்சம் மாற்றுத்திறனாளிகள்
/
உயிரற்று கிடக்கும் வேலைவாய்ப்பு அரசாணை; வேதனையுடன் 15 லட்சம் மாற்றுத்திறனாளிகள்
உயிரற்று கிடக்கும் வேலைவாய்ப்பு அரசாணை; வேதனையுடன் 15 லட்சம் மாற்றுத்திறனாளிகள்
உயிரற்று கிடக்கும் வேலைவாய்ப்பு அரசாணை; வேதனையுடன் 15 லட்சம் மாற்றுத்திறனாளிகள்
ADDED : மார் 07, 2025 07:17 AM

கோவை : அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கும் அரசாணை இரு ஆண்டுகளாக உயிரற்று கிடப்பதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தேசிய பார்வையற்றோர் இணைய தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன் கூறியதாவது:
ஒவ்வொரு நிதியாண்டும் மத்திய, மாநில அரசுகள் வரவு, செலவு நிதி நிலை அறிவிக்கும்பொழுது மாற்றுத்திறனாளிகள் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பர். ஆனால், நிதிநிலை அறிக்கை தயார் செய்யும்போது, பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளை அரசு அழைத்து பேசுவதுண்டு. துரதிஷ்டவசமாக மாற்றுத்திறனாளிகளை அழைக்க தவறுகின்றனர்; மறுக்கிறார்கள்.
தமிழகத்தில், 21 வகையான, 10 லட்சம் பார்வை மாற்றுத்திறனாளிகள் உட்பட, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கும் எதிர்பார்ப்புகள், பிரச்னைகள் உண்டு. அதற்கான தீர்வை நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாத பராமரிப்பு தொகையாக ரூ.1,500 மிகக்குறைந்த தொகை வழங்கப்படுகிறது.
இதை வைத்துதான் காலத்தை கழிக்கின்றனர். அண்டைய மாநிலங்களில் ரூ.3,000, ரூ.4,000, ரூ.6000 உதவித்தொகை தரப்படுகிறது. எனவே, தமிழகத்தில் ரூ.5,000 ஆக உதவித்தொகையை உயர்த்த கோரிவருகிறோம். கடந்த, 2023 ஜூலை, 24ம் தேதி தமிழக அரசு வேலைவாய்ப்பு தொடர்பாக அரசாணை, 20ஐ வெளியிட்டது.
ஓராண்டுக்குள் அந்த அரசாணையை செயல்படுத்த வேண்டும். ஆனால், அந்த அரசாணை உயிரற்று கிடக்கிறது. அதற்கு உயிர்கொடுத்து உடனடியாக அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை கண்டறிந்து, சிறப்பு தேர்வுகள் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் தர வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் பலர் தற்காலிக ஆசிரியர்களாகவும், அரசு ஊழியர்களாகவும் உள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் அனைத்து வகை பொருட்களும் இலவசமாக வழங்க வேண்டும். இப்படி, 24 வகையான கோரிக்கைகள் அரசிடம் முன்வைத்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.