/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடையில் 3,000 பேருக்கு எழுத்தறிவு பயிற்சி
/
காரமடையில் 3,000 பேருக்கு எழுத்தறிவு பயிற்சி
ADDED : செப் 14, 2025 11:22 PM

காரமடை; மத்திய அரசின் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டில் காரமடை கல்வி வட்டாரத்தில் 3,000 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எழுத்தறிவு கற்பிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவில்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கப்படுகிறது. கோவை மாவட்டம் காரமடை கல்வி வட்டாரத்தில் 595 கற்றல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மையத்திலும் 20 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அல்லது கற்போரின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பொது இடங்களில், காலை அல்லது மாலை வேளைகளில் இரண்டு மணி நேர வகுப்புகள் தன்னார்வலர்கள், ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆசிரியர்கள் முன்னரே கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு காரமடை கல்வி வட்டாரத்தில் 3,000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, காரமடை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் கூறியதாவது:-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களின் விண்ணப்பங்களில் யார் கையொப்பமிடாமல் கைரேகை வைக்கிறார்களோ, அவர்களை அடையாளம் கண்டும், ஆசிரியர்கள் கணக்கெடுப்பின் படியும் தற்போது 3,000 பேருக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தன்னார்வலர்களுக்கு சமீபத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தில் பலரும் வயது வித்தியாசம் பார்க்காமல் ஆர்வமாக படிக்கின்றனர்.
தன்னார்வலர்கள் நேரடியாக அவர்களது இருப்பிடத்திற்கு சென்று, அங்குள்ள பொது இடங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.---