/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெங்கடாசலபதி நகரை காப்பாற்று 'பெருமாளே!'
/
வெங்கடாசலபதி நகரை காப்பாற்று 'பெருமாளே!'
UPDATED : டிச 08, 2025 06:02 AM
ADDED : டிச 08, 2025 05:58 AM

மாநகராட்சி தெற்கு மண்டலம், 85வது வார்டில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் வெள்ளலுார், குப்பை கிடங்கு வளாகத்தையொட்டி இருக்கும் கோணவாய்க்கால்பாளையம் பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.
குறிச்சி குளம் திருவள் ளுவர் சிலை அருகே, வெங்கடாசலபதி நகர் இறக்கத்தில் இருந்து சில்வர் ஜூபிலி நகருக்கு செல்லும், 6 மீட்டர் பொதுவழித்தடத்தை, சிலர் காம்பவுண்ட் சுவர் எழுப்பி ஆக்கிரமித்துள்ளதை மீட்டு தருமாறு, அப்பகுதி மக்களிடம் கோரிக்கை வலுத்துள்ளது. வெங்கடாசலபதி நகர், திருமறை நகர் பகுதி மக்கள் கால்வாய் அடைப்பால் வெளியேறும் கழிவு நீரால் துர்நாற்றம், கொசு தொல்லை போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
தனியார் பள்ளி தாளாளர் சாவித்திரி கூறுகையில், ''குறிச்சி குளத்தில் இருந்து வரும் தண்ணீர், 16 அடி ராஜவாய்க்கால் வழியாக வெங்கடாசலபதி நகரை கடக்கிறது. இந்நகரின் கழிவுநீரும், சுந்தராபுரம் பகுதியில் இருந்து வரும் கழிவுநீரும் இந்த வாய்க்காலில் கலப்பதால் கழிவுநீர் பெருக்கெடுக்கிறது.
வெங்கடாசலபதி நகரில் எங்கள் பள்ளியை ஒட்டி, இந்த வாய்க்கால் செல்கிறது. பாதி வழியில் இந்த வாய்க்காலை தனியார் சிலர், அடைத்து வைத்து வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், கழிவுநீர் திருமறை நகருக்குள் செல்கிறது. எங்கள் பள்ளி, அருகே விவசாய நிலங்கள் இரண்டரைமாதமாக கழிவுநீரில் மூழ்கியிருந்தன. கொசு, துர்நாற்றம் காரணமாக குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
மஞ்சள் நிற தண்ணீர் வெள்ளலுார் குப்பை கிடங்கையொட்டி இருக்கும், முதலியார் வீதியில் போடப்பட்டுள்ள போர் வெல்களில் இருந்து மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வருகிறது. குப்பை கழிவுகளால் நிலத்தடி நீர் இந்நிலைக்கு ஆளாகியுள்ளது. இதை பயன்படுத்தும்போது உடலில் அரிப்பு ஏற்படுகிறது. நல்ல தண்ணீர் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. குப்பை கிடங்கால் நரக வேதனையை சந்திக்கிறோம். -சரஸ்வதி இல்லத்தரசி.
சுற்றுச்சுவர் தேவை கோணவாய்க்கால் பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையம் கட்டி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் பழைய கட்டடத்தில்தான் குழந்தைகள் படித்துவருகின்றனர். புதிய அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் இல்லை. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இம்மையம் அருகே,20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சாக்கடை புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது. -ராஜேந்திரன் சோப் பவுடர் விற்பனையாளர்.
கொசு தொல்லை அழகு நகரில், 23 அடி அகல ரோடு ஆக்கிரமிப்பு காரணமாக, 14 அடியாக சுருங்கிவிட்டது. குறிச்சி குளத்தில் இருந்து அழகு நகர் மூன்றாவது வீதி அருகே கடக்கும் வாய்க்காலை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு அதன்மீது 'ஸ்லாப்' அமைத்தால், பாரதி நகர் வரை நடைபாதையாக பயன்படுத்த முடியும். இங்கு கொசு தொல்லை அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு மக்கள் ஆளாகின்றனர். -சபாபதி ஓய்வு பெற்ற ரயில்வே அலுவலர்.

