/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகாளய அமாவாசை; பொதுமக்கள் திதி கொடுத்தனர்
/
மகாளய அமாவாசை; பொதுமக்கள் திதி கொடுத்தனர்
ADDED : செப் 21, 2025 11:14 PM

மேட்டுப்பாளையம்; மகாளய அமாவாசை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திதி கொடுத்தனர்.
மேட்டுப்பாளையம் கோவிந்தம்பிள்ளை மயானம் அருகே, நகராட்சிக்கு உட்பட்ட, அனைத்து ஹிந்து சமுதாய நந்தவனம் உள்ளது.
நேற்று மகாளய அமாவாசை முன்னிட்டு, ஏராளமான பொதுமக்கள், தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். நந்தவனம் நிர்வாகத்தினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதுகுறித்து அனைத்து ஹிந்து சமுதாய நந்தவனத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுகுமார், பொருளாளர் அருணாச்சலக்குமார் ஆகியோர் கூறியதாவது:
மகாளய அமாவாசையை முன்னிட்டு, காலை 4:00 மணிக்கு நந்தவனம் திறக்கப்பட்டது. அப்போதே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
அவர்களை வரிசைப்படுத்தி திதி கொடுக்க அனுப்பி வைக்கும் பணியில் சங்க உறுப்பினர்களும், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். நந்தவனத்தில், 12 புரோகிதர்கள் மட்டுமே உள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக வெளியூர்களில் இருந்து, கூடுதலாக, 28 புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டனர். மொத்தமாக, 40 புரோகிதர்கள் புரோகிதம் செய்தனர்.
நந்தவனத்தில் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு, நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர் பாட்டில், டீ, பிஸ்கட் மற்றும் காலை முதல் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு பொது மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால், இரண்டாவது படிக்கட்டில் கயிறு கட்டி பாதுகாப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.