ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் வரத்து துவக்கம்
ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் வரத்து துவக்கம்
ADDED : செப் 28, 2026 08:01 PM
உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு, மக்காச்சோளம் வரத்து துவங்கியுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. ஆண்டு தோறும் இரு சீசன்களில் ஏறத்தாழ, 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் பாசன வசதி பெறும் நிலங்களுக்கு நீர் திறக்கவில்லை.
அதே போல், மானாவாரி சாகுபடியும் மேற்கொள்ளப்படாமல், மக்காச்சோளம் சாகுபடி பணி உடுமலை பகுதிகளில், குறைந்தளவு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழநி தாலுகா மற்றும் உடுமலை சுற்றுப்பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை துவங்கியுள்ளது. அறுவடை செய்த மக்காச்சோளத்தை, விவசாயிகள், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு, உலர் களங்களில் காய வைத்து வருகின்றனர்.
ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது : உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விளை பொருட்களை காய வைக்க, உலர் களங்கள் வசதி உள்ளதால், சுற்றுப்புற விவசாயிகள் இங்கு கொண்டு வந்து காய வைத்து வருகின்றனர்.
கோழித்தீவன உற்பத்தி நிறுவனங்கள், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மக்காச்சோளம் கொள்முதல் செய்து வருகின்றனர்.
இருப்பினும், தேவை அதிகரிப்பு, பருவ மழை ஏமாற்றியதால், சாகுபடி சரிந்து, மக்காச்சோளம் வரத்தும் குறைவாக உள்ளதால், ஒரு குவிண்டால், 2,700 முதல், 2,800 ரூபாய் வரை விற்கிறது.
உலர் களங்களில் காய வைக்கப்பட்டுள்ள மக்காச்சோளம் தயாரானதும், இ–நாம் திட்டத்தின் கீழ் ஏலம் நடக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
