தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நகராட்சி மினி ஸ்டேடியம் வரைபடத்தில் மாற்றம் செய்யுங்க! பொள்ளாச்சி தடகள சங்கம் வலியுறுத்தல்

நகராட்சி மினி ஸ்டேடியம் வரைபடத்தில் மாற்றம் செய்யுங்க! பொள்ளாச்சி தடகள சங்கம் வலியுறுத்தல்

நகராட்சி மினி ஸ்டேடியம் வரைபடத்தில் மாற்றம் செய்யுங்க! பொள்ளாச்சி தடகள சங்கம் வலியுறுத்தல்


UPDATED : ஜூலை 23, 2026 04:45 PM

ADDED : ஜூலை 23, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 04:45 PM ADDED : ஜூலை 23, 2026 04:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமையும் மினி ஸ்டேடியம் வரைபடத்தில் மாற்றம் செய்யவும்; பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொள்ளாச்சி தடகள சங்கத்தினர் வலியுறுத்தினர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட பள்ளிகள், 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகளும் செயல்படுகின்றன. பள்ளிகளில் போதுமான மைதானம் போதிய பராமரிப்பின்றி உள்ளன.

மாணவ, மாணவியருக்கு விளையாட்டுக்காகவும், அதை முறைப்படி கற்றுக்கொடுக்க ஒரு இடம் இல்லாததால், அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்த முடிவதில்லை. மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, 'ஸ்டேடியம்' அமைக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில், மினி ஸ்டேடியம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவதை தீவிரப்படுத்தி முடிக்க வேண்டும்; வரைபடத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

2022ல் பணி துவக்கம் பொள்ளாச்சி தடகள சங்கத்தினர் கூறியதாவது:

பொள்ளாச்சி தடகள சங்கம், 15 ஆண்டுகளாக பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நகராட்சி அனுமதியுடன், 400 மீட்டர் ஓடுதளத்தையும், பொதுமக்களின் நடை மைதானத்தையும் பராமரித்து இருக்கை வசதிகளை உருவாக்கி, மரங்களை நட்டு பராமரித்தது.

கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேல் இந்த மைதானத்துக்கு அனைத்து உபகரணங்களுடன் ஒரு மினி ஸ்டேடியம் வேண்டும் என அரசிடம் வலியுறுத்தப்பட்டது. கடந்த, 2022ம் ஆண்டு அரசு மினி ஸ்டேடியம் அமைக்க துவங்கியது.

ஆனால், இன்று வரை பணிகள் முடிவடையாமல், யாரும் உபயோகப்படுத்த முடியாமல் பொதுமக்களும், மாணவர்களும், போலீஸ்துறையினர் பயிற்சி எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது நடக்கும் வேலையில், வரைபடத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தோம்.

400 மீ., ஓடுதளத்தின் இருபுறமும், டென்னிஸ் ஒரு புறம், கூடைப்பந்து ஒருபுறம், பூப்பந்திற்காகவும் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய முடியாமல் போய்விடும்.

இதுபோல தடகள விளையாட்டுகள் விளையாட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, விட்டுப்போன விளையாட்டுக்களை சேர்க்க வேண்டும்.

கூடைப்பந்து, டென்னிஸ், பூப்பந்து போன்றவற்றை மேல்மைதானத்தில் அமைக்க வேண்டும் என்பதுடன், ஓடுதளத்துக்கு இடையூறாக அமைந்திருக்கும் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

டென்னிஸ் கோர்ட், பேட்மிட்டன் கோர்ட், பேஸ்கட் பால் கோர்ட் சேர்க்க வேண்டும். உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள விளையாட்டுக்கும், மின்கம்பத்தை மாற்றி நடை பயிற்சி தளம் அமைக்க வேண்டும்.

எனவே, வரைபடத்தில் மாற்றியமைக்கவும், நடைபெற்று கொண்டு இருக்கும் வேலையை விரைவில் பொதுமக்களின் உபயோகத்துக்கு கொண்டு வர வேண்டும். இது குறித்து பொள்ளாச்சி எம்.எல்.ஏ.,விடம் மனு கொடுத்து வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us